/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதிதாக அமைத்த தார்ச்சாலைகள் தரம் குறித்து மக்கள் அதிருப்தி
/
புதிதாக அமைத்த தார்ச்சாலைகள் தரம் குறித்து மக்கள் அதிருப்தி
புதிதாக அமைத்த தார்ச்சாலைகள் தரம் குறித்து மக்கள் அதிருப்தி
புதிதாக அமைத்த தார்ச்சாலைகள் தரம் குறித்து மக்கள் அதிருப்தி
ADDED : பிப் 22, 2024 12:44 AM

ராமாபுரம், ராமாபுரத்தில், தரமற்றதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால், பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சென்னை, வளசரவாக்கம் மண்டலத்தில் நெற்குன்றம், போரூர், மதுரவாயல், ராமாபுரம் ஆகிய பகுதிகளில், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலைகள் பெரும்பாலும், குடிநீர் வாரிய பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளால் சேதமடைந்து உள்ளன.
இதையடுத்து, 37 கோடி ரூபாய் மதிப்பில், 466 சாலைகளை சீர் செய்யும் பணிகள் நடந்து வந்தன. இதில், மழையால் சில சாலை பணிகள் தடைபட்டன.
இச்சாலை பணிகள் தற்போது, மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், 154வது வார்டு ராமாபுரத்தில் சில நாட்களுக்கு முன், பல்வேறு தெருக்களில் சாலை அமைக்கப்பட்டது.
இதில், அம்மன் கோவில் தெரு, லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட சாலை, அடுத்த சில நாட்களிலேயே சேதமடைந்து, ஜல்லி பெயர்ந்து வருகிறது.
இதனால், சாலை பணியின் தரம் குறித்து, பகுதிமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன், சாலை தரமின்றி அமைக்கப்பட்டுள்ளதாக, 154வது வார்டு கவுன்சிலர் செல்வகுமார், மண்டல அதிகாரிகளிடம் புகார் கடிதம் அளித்துள்ளார்.
மாநகராட்சி சார்பில் தார்ச்சாலை அமைக்கும் போது, அதன் தரத்தை ஆய்வு செய்ய, தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக அந்த தனியார் நிறுவனத்திற்கு, பெரும் தொகை வழங்கப்படுகிறது.
இவ்வாறு, தொடர்ந்து அமைக்கப்படும் தார்ச்சாலைகள் தரமற்ற நிலையில் உள்ளதால், சாலை அமைக்கும் போது, அதன் தரத்தை ஆய்வு செய்ய ஒப்பந்தம் வழங்கிய தனியார் நிறுவனம், முறையாக செயல்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.