/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காகங்களை தொடர்ந்து புறாக்களும் உயிரிழந்து கிடப்பதால் மக்கள் பீதி
/
காகங்களை தொடர்ந்து புறாக்களும் உயிரிழந்து கிடப்பதால் மக்கள் பீதி
காகங்களை தொடர்ந்து புறாக்களும் உயிரிழந்து கிடப்பதால் மக்கள் பீதி
காகங்களை தொடர்ந்து புறாக்களும் உயிரிழந்து கிடப்பதால் மக்கள் பீதி
ADDED : மார் 05, 2026 05:28 AM

சென்னை: சென்னையில் காகங்களை தொடர்ந்து, ஆங்காங்கே புறாக்களும் உயிரிழந்து வருவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடையாறு இந்திரா நகர் பூங்காவில், ஜன., 5 முதல் காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. மாநகராட்சி மற்றும் கால்நடை துறை அதிகாரிகள், இறந்த காகங்களின் மாதிரிகளை பரிசோதனை செய்தனர்.
கல்லீரல், மண்ணீரலில் பாதிப்புகள் இருந்த நிலையில், இறப்புக்கான காரணம் கண்டறிய முடியவில்லை.
இதையடுத்து, மத்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு, காகங்களின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு, பறவை காய்ச்சலால் காகங்கள் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கையை தீவிரப் படுத்தவும், மாநில அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது.
தமிழகத்தை பொருத்தவரை சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலுார் ஆகிய 14 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளது.
இதில், கோழி, புறா உள்ளிட்டவை உயிரிழந்தாலும், காகங்கள் மட்டுமே பறவை காய்ச்சலால் உயிரிழந்து வருவதாக, தமிழக கால்நடைத்துறை தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் காகங்கள் போல், புறாக்களும் கீழே விழுந்து இறந்து வருகின்றன.
குறிப்பாக, முகப்பேர் கிழக்கு பகுதியில், இரண்டு வாரத்திற்கு முன் ஒரு புறா வீட்டு வாசலில் இறந்த கிடந்த நிலையில், நேற்று மற்றொரு புறாவும் மொட்டை மாடியில் இறந்து கிடந்தது. காகங்கள் போல், புறாக்களும் உயிரிழந்து வருவது, பறவை காய்ச்சலாக இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
காகங்கள் போல், புறாக்கள் பெரிய அளவில் உயிரிழக்கவில்லை. மேலும், காகங்களில் மட்டும் தான், பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற பறவைகளிடம் உறுதி செய்யப்படவில்லை.
மனிதர்களிடமும் பறவை காய்ச்சல் கண்டறியப்படவில்லை. எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம். அதேநேரம், இறந்து கிடக்கும் பறவைகளை வெறும் கையால் அப்புறப்படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

