/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் செத்து மடியும் காகங்கள்; மாநகராட்சி அகற்றாததால் மக்கள் பீதி
/
சென்னையில் செத்து மடியும் காகங்கள்; மாநகராட்சி அகற்றாததால் மக்கள் பீதி
சென்னையில் செத்து மடியும் காகங்கள்; மாநகராட்சி அகற்றாததால் மக்கள் பீதி
சென்னையில் செத்து மடியும் காகங்கள்; மாநகராட்சி அகற்றாததால் மக்கள் பீதி
UPDATED : பிப் 17, 2026 09:38 AM
ADDED : பிப் 17, 2026 06:33 AM

சென்னை: சென்னையில் ஆங்காங்கே பறவை காய்ச்சலால், காகங்கள் செத்து மடிந்து வரும் நிலையில், அவற்றை உரிய பாதுகாப்புடன் அகற்றாமல், மாநகராட்சி அலட்சியம் காட்டி வருவது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடையாறு இந்திரா நகர் பகுதியில், ஜன., 5ம் தேதி காகங்கள் அடுத்தடுத்து கீழே விழுந்து இறந்தன. அதன் மாதிரிகளை ஆய்வு செய்த மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், பறவை காய்ச்சலால் காகங்கள் இறந்ததாக உறுதி செய்தது.
பறவை காய்ச்சல் தொற்று, மனிதர்களுக்கு பரவும் என்பதால், தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, காகங்கள் இறந்தால், அவற்றை கையுறைகளை பயன்படுத்தி, பாதுகாப்பாக அகற்றவும் அறிவுறுத்தி உள்ளது.
நடவடிக்கை இல்லை இதையடுத்து, மாநிலம் முழுதும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி, வனத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், பொது சுகாதாரத்துறைக்கு, தமிழக தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவிட்டார்.
ஆனால், சென்னை மாநகராட்சியில் தொடர்ந்து ஆங்காங்கே காகங்கள் இறந்து வருகின்றன. அவற்றை துாய்மை பணியாளர்கள் கையுறை அணிந்து அகற்ற வேண்டும் என, மாநகராட்சி கால்நடைத்துறை உத்தரவிட்டது.
ஆனால், அண்ணாசாலை, அண்ணா மேம்பாலம் கீழே இறந்து கிடக்கும் காகத்தை, மாநகராட்சி அகற்றாததால் அப்படியே கிடக்கின்றன. அதேபோல், வேளச்சேரி, எண்ணுார் உள்ளிட்ட பகுதிகளிலும் இறந்த காகங்களை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.
இவற்றை பொதுமக்கள் வெறும் கையால் தொட்டால், அவர்களுக்கும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் இருக்கும் நிலையில், மாநகராட்சி தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.
தொடக்கூடாது இதுகுறித்து, மாநகராட்சி கால்நடை நல அலுவலர் கமால் உசேன் கூறியதாவது:
சென்னையில் காகங்கள் இறந்தது குறித்து தகவல் கிடைத்தவுடன், பாதுகாப்பாக அகற்றப்படுகிறது.
அண்ணா சாலை, வேளச்சேரி பகுதிகளில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். காகங்கள் இறந்து கிடந்தால் பொதுமக்கள் வெறும் கையால் தொடக்கூடாது. '1913' என்ற எண்ணில் தெரியப்படுத்த வேண்டும். மாநகராட்சி பாதுகாப்பாக காகங்களை அகற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.

