/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திட்டமிடலின்றி அமைக்கப்பட்ட 'யு - டர்ன்' வசதி விபத்தும் விதிமீறலும் அதிகரிப்பால் மக்கள் பீதி
/
திட்டமிடலின்றி அமைக்கப்பட்ட 'யு - டர்ன்' வசதி விபத்தும் விதிமீறலும் அதிகரிப்பால் மக்கள் பீதி
திட்டமிடலின்றி அமைக்கப்பட்ட 'யு - டர்ன்' வசதி விபத்தும் விதிமீறலும் அதிகரிப்பால் மக்கள் பீதி
திட்டமிடலின்றி அமைக்கப்பட்ட 'யு - டர்ன்' வசதி விபத்தும் விதிமீறலும் அதிகரிப்பால் மக்கள் பீதி
ADDED : நவ 13, 2025 12:51 AM

அம்பத்துார்: திட்டமிடலின்றி அமைக்கப்பட்ட 'யு - டர்ன்' வசதியால், அம்பத்துார் சாலையில் விதிமீறல் அதிகரித்துள்ளது. உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும்முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், யு - டர்ன் முறையை ரத்து செய்து, சிக்னல் முறையை கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
ஆறு வழிச்சாலையாக உள்ள அண்ணா சாலையை முன்மாதிரியாக வைத்து, அம்பத்துார் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சி.டி.எச்., சாலையில், 'யு - -டர்ன்' முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதில், சென்னையில் இருந்து திருவள்ளூர், திருப்பதிக்கு செல்லும் பிரதான சாலையான சி.டி.எச்., சாலை, 7 கி.மீ., நீளம் கொண்டது. இச்சாலை வழியாக, மாதவரத்தில் இருந்து புறநகர் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கனரக போக்குவரத்து அதிகளவில் உள்ளது.
இந்த நிலையில், சி.டி.எச்., சாலையில், கொரட்டூர், அம்பத்துார் தொழிற்பேட்டை, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், டன்லப், ராமசாமி பள்ளி உள்ளிட்ட சிக்னல்களில், சாலையின் நடுவே 'பேரிகாட்'கள் வைக்கப்பட்டு, 'யு - டர்ன்' முறை கொண்டு வரப்பட்டது.
சிக்னலுக்கு, 100 மீ., முன்னும் பின்னும், சாலை மைய தடுப்புச்சுவர் உடைக்கப்பட்டு, 'யு - டர்ன்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறுகிய துாரத்தில் வாகனங்கள் 'யு - டர்ன்' செய்வதால், போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அதிகரித்துள்ளன.
அதேபோல, விதிமீறி 'ஒன்வே'யில் எதிர் திசையில் வரும் வாகனங்களால், விபத்துகள் ஏற்படுவதோடு வாகன ஓட்டிகளிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பில் முடிகிறது. இதே நிலை தான், அம்பத்துார் -- செங்குன்றம் பிரதான சாலையிலும் நீடிக்கிறது.
உயிர்பலி அபாயம் சாலையை கடக்கும் பாதசாரிகளுக்கு, சிக்னல்கள் பெரிதும் உதவிகரமாக இருந்தன. இந்த 'யு -- டர்ன்' முறையால், மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு மத்தியில், பெண்களும், முதியவர்களும் உயிரை பணயம் வைத்து சாலையை கடக்கின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பால், கொரட்டூர் சந்திப்பில், 'யு - -டர்ன்' முறை கைவிடப்பட்டு, சிக்னல் முறைக்கு மீண்டும் போக்குவரத்து போலீசார் மாறியுள்ளனர்.
அதேபோல, சி.டி.எச்., சாலை மற்றும் அம்பத்துார் -- செங்குன்றம் சாலையில், மீண்டும் சிக்னல் முறையை கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை வலுத்து வருகிறது.
எழுதி கொடுங்க... 'யு - -டர்ன்' முறை குறித்து குறைகள் இருந்தால், நேரில் வந்து எழுத்து பூர்வமாக புகார் அளியுங்கள். நாங்கள் ஆய்வு செய்வோம். 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில் போலீசார் பணியில் இருப்பர். 'யு - -டர்ன்' பகுதியில் எப்போதும் போலீசார் பணியில் இருக்க முடியாது. சங்கு, போக்குவரத்து துணை கமிஷனர், ஆவடி போலீஸ் கமிஷனரகம்.

