/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டில் இருந்தபடியே போராட எண்ணுார் மக்கள் முடிவு
/
வீட்டில் இருந்தபடியே போராட எண்ணுார் மக்கள் முடிவு
ADDED : மார் 18, 2024 01:20 AM
எண்ணுார்:எண்ணுார், பெரியகுப்பம் மீனவ கிராமத்தில், 'கோரமண்டல் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்' என்ற தனியார் உரத்தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்நிறுவன வளாகத்தில் இருக்கும், ராட்சத அமோனியா தொட்டிக்கான குழாய் சேதமடைந்து, அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால், பெரியகுப்பம், சின்னகுப்பம், எர்ணாவூர் குப்பம் உள்ளிட்ட எண்ணுார் கிராமங்கள் பாதிக்கப்பட்டன. மூச்சுத்திணறல், வாந்தி, தலைசுற்றல் போன்ற உடல் உபாதைகளால் மக்கள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, அமோனியா வாயு கசிவிற்கு காரணமான, கோரமண்டல் தொழிற்சாலையை மூடக்கோரி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 82 நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் மாலை, லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
இதையடுத்து, எண்ணுார் மக்கள் பாதுகாப்பு கூட்டுக்குழு சார்பில், ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்நிலையில், நேற்று காலை எண்ணுார் உதவி கமிஷனர் வீரகுமார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், ''தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. ஒட்டுமொத்த அதிகாரமும் தேர்தல் கமிஷனிடம் உள்ளது. பொது இடங்களில் நான்கு நபர்களுக்கு மேல் ஒன்று கூடினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் சூழல் உள்ளது. எனவே, போராட்டத்தை கைவிட வேண்டும்,'' என தெரிவித்தார்.
இதையடுத்து, பெரியகுப்பம் வாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலை, எண்ணுார் மக்கள் பாதுகாப்பு குழுவினரே அகற்றினர்.
மேலும், தொழிற்சாலையை நிரந்தரமாக மூடும் வரை, வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றியும், அமோனியா பாதிப்பு குறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டியும் போராட்டத்தை தொடர அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

