/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதாள சாக்கடை இணைப்பின்றி மடிப்பாக்கத்தில் மக்கள் அவதி
/
பாதாள சாக்கடை இணைப்பின்றி மடிப்பாக்கத்தில் மக்கள் அவதி
பாதாள சாக்கடை இணைப்பின்றி மடிப்பாக்கத்தில் மக்கள் அவதி
பாதாள சாக்கடை இணைப்பின்றி மடிப்பாக்கத்தில் மக்கள் அவதி
ADDED : ஏப் 21, 2025 02:41 AM

மடிப்பாக்கம், :மடிப்பாக்கம் பெரியாரை நகர் விரிவு பகுதி 2ல், ஒன்று முதல் ஏழாவது தெரு வரையும், காஞ்சி காமாட்சி நகர், ஒன்று முதல் மூன்றாவது தெரு வரையும், மிகவும் தாழ்வான பகுதிகளாகும்.
இப்பகுதி ஊராட்சியாக இருந்தபோது அமைக்கப்பட்ட இரண்டரை அடி அகலமுள்ள மழைநீர் கால்வாய் தான், தற்போதும் பயன்பாட்டில் உள்ளது.
கழிவுநீர் கால்வாய் இல்லாததால், இக்கால்வாயையே மக்கள் கழிவுநீர் கால்வாயாக பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் ஆங்காங்கே சேதமடைந்து, கழிவுநீர் வெளியேறி வருகிறது.
தவிர, அனைத்து பணிகளும் முடிந்தும், வீடுகளுக்கு குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை.
மேலும், பயன்பாட்டில் இருந்த குடிநீர் தொட்டிகளும் சேதமடைந்துள்ளன. அதில் தண்ணீர் நிரப்பப்படாததால், அப்பகுதிவாசிகள் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
மடிப்பாக்கம் ஊராட்சி, மாநகராட்சியுடன் இணைப்பட்டு, 15 ஆண்டுகளாகின்றன. ஆனாலும், முறையான மழைநீர் வடிகால்வாய் இல்லாததால், மழைக்காலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மூன்று அடி வரை நீர் தேங்குகிறது.
குடிநீர், பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும், வீடுகளுக்கு இன்னும் இணைப்பு வழங்கப்படவில்லை. பகுதிவாசிகள் 'வைப்பு தொகை' செலுத்த தயாராக இருந்தும், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
எனவே, பழைய மழைநீர் வடிகால்வாயை அகற்றி, புதிதாக அமைக்கவும், விரைவில் குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை வீடுகளுக்கு வழங்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

