/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணலியில் அடிக்கடி மின்வெட்டு துாக்கமிழந்து தவிக்கும் மக்கள்
/
மணலியில் அடிக்கடி மின்வெட்டு துாக்கமிழந்து தவிக்கும் மக்கள்
மணலியில் அடிக்கடி மின்வெட்டு துாக்கமிழந்து தவிக்கும் மக்கள்
மணலியில் அடிக்கடி மின்வெட்டு துாக்கமிழந்து தவிக்கும் மக்கள்
ADDED : ஏப் 24, 2025 12:20 AM
மணலி, மணலி பகுதியில் தொடரும் மின்தடை காரணமாக, மக்கள் துாக்கமிழந்து தவிக்கின்றனர்.
சென்னை, மணலியில், 15 முதல் 22 வரை, எட்டு வார்டுகள் உள்ளன. இங்கு, 1.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு, தரை - வான்வழியாக, மின் வடம், வயர் மூலம் மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
மின்வாரியம் மணலி உப கோட்டத்தின் கீழ், நாப்பாளையம், மணலி, மணலிபுதுநகர், ஜோதி நகர், சாத்தாங்காடு உட்பட ஐந்து உதவி பொறியாளர்கள் கவனிப்பில், தலா, 8,500 - 19,500 வீட்டிணைப்புகள் உள்ளன. மூன்று உதவி பொறியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இரு இடங்களில், பெண் உதவி பொறியாளர்கள் பணியில் உள்ளனர்.
இந்நிலையில், மணலி சுற்றுவட்டார பகுதிகளில், அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக குற்றசாட்டு எழுந்தது.
பகல் நேரங்களில் மின் தடை ஏற்படுவதால், வணிகர்கள், சிறு - குறு வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கின்றனர். மக்கள் புழுக்கம் தாங்க முடியா மல், மர நிழல்களில் தஞ்சமடைய வேண்டியுள்ளது.
இரு தினங்களுக்கு முன் மின்தடை காரணமாக, மணலி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விசாரிக்க முற்பட்ட மக்கள், அதிகாரி, ஊழியர் யாரும் இல்லாததால் சாலை மறியல் செய்தனர்.
வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், 'ஏசி' பயன்பாடு உட்பட மின் நுகர்வு அதிகரித்திருக்கும் நிலையில், அதற்கேற்ப மின் மாற்றி, பெட்டி மற்றும் வடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து நிலைமை சரி செய்திருக்க வேண்டும் என, பொது மக்கள் கூறுகின்றனர்.
திருவொற்றியூர், எண்ணுார் உள்ளிட்ட பகுதிகளிலும், நள்ளிரவில் ஏற்படும் மின்தடையால், மக்கள் சிரமடைகின்றனர்.
மின்வாரிய உயர் அதிகாரிகள் கவனித்து, காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்பி, பணியில் இருக்கும் உதவி பொறியாளர்களின் வேலை பளுவை குறைக்க வேண்டும்.
வெயில் காலத்திற்கு ஏற்ப, மின்மாற்றி உள்ளிட்ட வசதிகளை அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இரு தினங்களுக்கு முன் மின்தடை ஏற்பட காரணம், மழைநீர் வடிகால் பணியின் போது, ஜே.சி.பி., யால் கேபிள் வயர் சேதமானது. அதை உடனடியாக சரி செய்து மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. அடிக்கடி மின்தடை கிடையாது. உதவி பொறியாளர் பற்றாக்குறை பல ஆண்டுகளாக உள்ளது. 'ஏசி' பயன்பாடு காரணமாக மின் நுகர்வு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.

