/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சிங்கார சென்னை'யில் 80 சதுரடியில் வாழும் மக்கள் 30 ஆண்டாக ராயபுரத்தில் போராட்ட வாழ்க்கை
/
'சிங்கார சென்னை'யில் 80 சதுரடியில் வாழும் மக்கள் 30 ஆண்டாக ராயபுரத்தில் போராட்ட வாழ்க்கை
'சிங்கார சென்னை'யில் 80 சதுரடியில் வாழும் மக்கள் 30 ஆண்டாக ராயபுரத்தில் போராட்ட வாழ்க்கை
'சிங்கார சென்னை'யில் 80 சதுரடியில் வாழும் மக்கள் 30 ஆண்டாக ராயபுரத்தில் போராட்ட வாழ்க்கை
ADDED : மே 21, 2025 12:31 AM

ராயபுரம், ராயபுரம், கன்னி கோவில் தெரு, ஆதாம் தெரு உள்ளிட்ட பகுதிகளில், 40 வீடுகளில் 200க்கும் மேற்பட்டோர், நான்கு தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள், எந்தவித அடிப்படை வசதியும் இன்றி, 80 சதுரடியில் குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். குடிசைகளில் ஏற்பட்ட தொடர் தீ விபத்து காரணமாக, 1999ல் அ.தி.மு.க., ஆட்சியில் காலத்தில், 80 சதுரடியில் தலா 40 குடும்பங்களுக்கு கல் வீடுகள் கட்டி தரப்பட்டன.
கடந்த 27 ஆண்டுகளாகியும், அதே வீடுகளில் எந்தவித அடிப்படை வசதியுமின்றி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வீடுகள் பழைய கட்டடம் என்பதால், சுவர்கள் முழுதும் விரிசல் விழுந்துள்ளது. மரங்களின் வேர்கள் வீடு முழுதும் பரவி அபாயகரமாக உள்ளது.
மழைக்காலங்களில் வீடுகளின் சுவர்களில் நீர் அருவி போல் கொட்டுகிறது. வீடுகளின் சிமென்ட் ஷீட் மேற்கூரைகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. பெரும் விபத்து, அசம்பாவிதங்கள் ஏற்படும்முன், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கன்னி கோவில் தெரு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நாய்கள், கொசு, எலி, பூனை தொல்லையால், நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்கின்றனர். இங்கு ஆண், பெண்களுக்கு என, தலா ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது. அதிலும், போதிய பராமரிப்பு இல்லாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
பெண்கள் சமைப்பதற்கும், குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும், துணி மாற்றுவதற்கு இடம் இல்லை. தெருக்களில் துணி துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது, சமைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்கின்றனர்.
மற்றொரு கண்ணப்பர் திடல் பகுதியாக, இந்த இடம் உள்ளது. பெண்கள் பாதுகாப்பு கருதி மாற்று இடம் வழங்கக்கோரி, 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால், அரசு இன்னும் செவி சாய்க்காதது ஏன் என்று தெரியவில்லை.
பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
கொள்ளுப்பாட்டி, பாட்டி, அம்மா, நான் என நான்கு தலைமுறைகளாக வசிக்கிறோம். எந்தவித அடிப்படை வசதிகளின்றி நாய்கள், எலிகள், பூனை, கொசு தொல்லையுடன், சுகாதார சீர்கேடுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம்.
போதிய கழிப்பறை வசதி இல்லாததால், 1 கி.மீ., நடந்து சென்று எம்.சி.ரோடு, மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள பொது கழிப்பறைகளை பயன்படுத்த செல்ல வேண்டியுள்ளது. பெண்கள் போதிய அளவில் குளிப்பதற்கும், துணி மாற்றுவதற்கு இடம் இல்லை. அதிகாலை 4:00 மணியளவில் நடுரோட்டில் குளிக்கும் அவல நிலை உள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.உஷாராணி, 43.
ஏமாற்றிய எம்.எல்.ஏ.,
தற்போதைய தி.மு.க., - எம்.எல்.ஏ., 'ஐட்ரீம்' மூர்த்தி, தேர்தலில் ஓட்டு சேகரிக்க வந்தபோது, மூலக்கொத்தளம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கி தருவதாக வாக்குறுதி தந்தார். கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. வீடுகளில் குறிப்பீட்டு எண்களும் எழுதப்பட்டன. ஆனால், வீடுகள் ஒதுக்காமல் ஏமாற்றி விட்டார்.
மாற்று இடம் கேட்டு, எம்.எல்.ஏ., -- எம்.பி., முதல்வர் தனிப்பிரிவு என, பலரிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
- எஸ்.மகாலட்சுமி, 38.
மழை பெய்தாலே பயம்
மழை காலங்களில் கழிவுநீர் வீடுகளில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. சிறு மழை பெய்தாலே பயத்துடன் வாழ வேண்டியதாகி உள்ளது. மாநகராட்சியிடம் தினமும் புகார் செய்கிறோம். அவர்கள் எங்களை கண்டுகொள்வதில்லை. சுகாதாரமற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். மாற்று குடியிருப்புகள் வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜி.பாலமுருகன், 22.