/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் தேக்கம், மின் வினியோகம் பாதிப்பு அம்பத்துார் மக்கள் கடும் அவதி
/
கழிவுநீர் தேக்கம், மின் வினியோகம் பாதிப்பு அம்பத்துார் மக்கள் கடும் அவதி
கழிவுநீர் தேக்கம், மின் வினியோகம் பாதிப்பு அம்பத்துார் மக்கள் கடும் அவதி
கழிவுநீர் தேக்கம், மின் வினியோகம் பாதிப்பு அம்பத்துார் மக்கள் கடும் அவதி
ADDED : டிச 04, 2025 02:08 AM

அம்பத்துார்: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அம்பத்துார் மண்டலம், 82வது வார்டு, கள்ளிக்குப்பம். தென்றல் நகர் பிரதான சாலையில், முழங்கால் அளவுக்கு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால், அப்பகுதியில் உள்ள, 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்போர் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
கள்ளிக்குப்பம் அடுத்த முருகாம்பேடு பிரதான சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, பாதாள சாக்கடை மூடிகள் வழியாக கழிவு நீர் பொங்கி வழிந்து, சாலையில் ஆறாக ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதியடைந்தனர்.
பாதாள சாக்கடையில் இருந்து வெளியான கழிவு நீர், அருகில் இருந்த புழல் ஏரியில் சென்று கலந்தது.
அதேபோல், 81வது வார்டு, கே.கே., சாலையிலும், ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி, சாலையில் தேங்கிய மழை நீருடன் கலந்தது.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
மேற்கு பாலாஜி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, தாழ்வாக உள்ள தென்றல் நகருக்குள் மழை வெள்ளம் வருகிறது. முழங்காலுக்கும் மேல் தேங்கியுள்ள மழை வெள்ளத்தில், கழிவுநீரும் கலந்துவிட்டதால், துர்நாற்றமும், இரவில் கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மழைக்கும் இப்பகுதியில் மழை வெள்ளம் தேங்குவது வாடிக்கையாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மின்வினியோகம் பாதிப்பு
அம்பத்துார் மண்டலம், 84வது வார்டு, கொரட்டூர், வடக்கு நிழற்சாலை மற்றும் மத்திய நிழற்சாலையில் மழை வெள்ளம் தேங்கியது. அதில், பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறிய கழிவு நீரும் கலந்தது. இந்நிலையில், வடக்கு நிழற்சாலையில் தாழ்வாக உள்ள ஒரு சில வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் அவதியடைந்தனர்.
தகவலறிந்து சென்ற அம்பத்துார் மண்டல ஊழியர்கள், ராட்சத மோட்டர்கள் வாயிலாக, வீட்டினுள் புகுந்த மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல், 83வது வார்டு, கொரட்டூர், சீனிவாசபுரம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரதான சாலையில், கணுக்கால் அளவிற்கு மழை வெள்ளம் தேங்கியது.
அப்பகுதியில் நேற்று காலை முதல் மின்வினியோகம் சீரற்ற முறையில் இருந்தது. மாலை முற்றிலுமாக மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால், முதியவர்கள் கர்ப்பிணியர் அவதியடைந்தனர்.

