/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீரில் கழிவு நீர் கலப்பு தரமணி மக்கள் தவிப்பு
/
குடிநீரில் கழிவு நீர் கலப்பு தரமணி மக்கள் தவிப்பு
ADDED : ஆக 27, 2025 12:30 AM

தரமணி,தரமணியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால், தரமணி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
தரமணி, திருவள்ளுவர் நகர், கம்பர் நகர், பாரதியார் தெரு, புத்தர் தெரு உள்ளிட்ட பகுதிகளில், 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு, வினியோகம் செய்யும் குடிநீர், பத்து நாட்களுக்கு மேலாக கலங்கலாகவும், துர்நாற்றம் வீசியும் வருகிறது. குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதால், சமைக்க, குடிக்க முடியாமல் கேன் குடிநீர் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குளித்தால், உடல் அரிப்பு ஏற்பட்டு சிரமப்படுகின்றனர். குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். இரண்டு மாதத்திற்குமுன், இதேபோன்ற பிரச்னை ஏற்பட்டது. மீண்டும், குடிநீர் சுகாதாரமில்லாமல் வருவதால், நோய் தொற்று பாதிக்கும் அச்சத்தில் பகுதிமக்கள் உள்ளனர். நேற்று, துர்நாற்றம் வீசும் குடிநீருடன் அதிகாரிகளிடம் காட்ட காத்திருந்தனர். முகாம் சென்றதால், நாளைக்கு வருவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'விடுதிகளில் இரவில் சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு எடுக்க பள்ளம் தோண்டி கழிவுநீர் குழாயை சேதப்படுத்துகின்றனர். ஏற்கனவே பல இணைப்புகளை துண்டித்து, மோட்டார்கள் பறிமுதல் செய்துள்ளோம். சில மாதம் பிரச்னை இல்லாமல் இருந்தது. மீண்டும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது தெரிகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, சுகாதாரமான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும்,'' என்றனர்.