/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
படுமோசமான சாலையால் ஆம்புலன்ஸ் வர தாமதம் மயங்கி விழுந்த பெண் இறந்ததால் மக்கள் மறியல்
/
படுமோசமான சாலையால் ஆம்புலன்ஸ் வர தாமதம் மயங்கி விழுந்த பெண் இறந்ததால் மக்கள் மறியல்
படுமோசமான சாலையால் ஆம்புலன்ஸ் வர தாமதம் மயங்கி விழுந்த பெண் இறந்ததால் மக்கள் மறியல்
படுமோசமான சாலையால் ஆம்புலன்ஸ் வர தாமதம் மயங்கி விழுந்த பெண் இறந்ததால் மக்கள் மறியல்
ADDED : அக் 07, 2025 12:25 AM

வியாசர்பாடி, வியாசர்பாடியில் குண்டும், குழியுமான சாலையால் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஏற்பட்டதால், பெண் உயிரிழந்ததாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பூர், 46வது வார்டு, வியாசர்பாடி, நேரு நகரில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில், லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில், இரு மாதங்களுக்கு முன், புதிதாக சாலை அமைப்பதற்காக மில்லிங் செய்யப்பட்டது. அப்போது, நிலத்திற்கடியில் புதைக்கப்பட்டிருந்த கழிவுநீர் குழாய் உடைந்ததால், சாலை சீரமைப்பு பணியை கிடப்பில் போட்டனர். இதனால் குண்டும், குழியுமாக மாறி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் சாலை உள்ளது.
சாலை பெயர்ந்ததால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள், இந்நகருக்குள் வருவதில்லை. இதனால், ஒரு பெண் நேற்று உயிரிழந்தார்.
நேரு நகர், 1வது தெருவைச் சேர்ந்த தர்மராஜன் மனைவி பவானி, 48, நேற்று காலை, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சுயநினைவின்றி வீட்டில் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து குடும்பத்தினர், '108' ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், உடைக்கப்பட்ட சாலையால், ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளே வரமுடியவில்லை.
பின், கூட்ஸ் செட் வழியாக, அரை கி.மீ., சுற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு செல்வதற்குள், பவானி உயிரிழந்தார்.
இரு மாதங்களாக சாலையை சீரமைக்காதது, ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் தான் பவானி உயிரிழந்தார் எனக்கூறி, ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள், வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அவர்களிடம் சமரச பேச்சு நடத்தியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'வியாசர்பாடியில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த கழிவுநீர் குழாய்கள் செல்கின்றன. இப்பகுதியில் பழுதடைந்த கழிவுநீர் குழாய்களில் கசிவு ஏற்பட்டு, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. விரைவில் கழிவுநீர் குழாய்கள் மாற்றப்பட்டு, அப்பகுதி முழுதும் சாலை அமைக்கப்படும்' என்றனர்.