/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிகாரிகளின் ஒரே ஒரு குறுஞ்செய்தி பதறியடித்து வரி செலுத்திய மக்கள்
/
அதிகாரிகளின் ஒரே ஒரு குறுஞ்செய்தி பதறியடித்து வரி செலுத்திய மக்கள்
அதிகாரிகளின் ஒரே ஒரு குறுஞ்செய்தி பதறியடித்து வரி செலுத்திய மக்கள்
அதிகாரிகளின் ஒரே ஒரு குறுஞ்செய்தி பதறியடித்து வரி செலுத்திய மக்கள்
ADDED : ஜன 29, 2025 12:24 AM

திருநின்றவூர், திருநின்றவூர் நகராட்சியில் 27 வார்டுகளில், 13,324 குடியிருப்புகள் உள்ளன. ஆண்டிற்கு இருமுறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.
இதை முறையாக கட்டாதவர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், வரி விதிப்பாளர்களுக்கு, திருநின்றவூர் நகராட்சி சார்பில் மொபைல் போனில் நேற்று குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
'அதில், வரி பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும், தவறும் பட்சத்தில் சட்டரீதியான நீதிமன்ற நடவடிக்கை தொடரப்படும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், வரி செலுத்துவதற்காக ஒரே நேரத்தில், நகராட்சி அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் செய்வதறியாது திணறினர். முதியோர் உட்பட பொதுமக்கள் அனைவரும், நீண்ட வரிசையில் காத்திருந்து வரி செலுத்தி சென்றனர்.
இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தாமல், வரி வசூலில் திருநின்றவூர் நகராட்சி நிர்வாகம் குறியாக இருக்கிறது. வரி கட்டுவதற்கு மார்ச் மாதம் இறுதி வரை கால அவகாசம் உள்ளது.
ஆனால், அதற்குள் பொது மக்களை பயமுறுத்தும் வகையில் குறுஞ்செய்தி அனுப்புவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த குறுஞ்செய்தியில், கடைசி தேதி, எந்த அரையாண்டிற்கான வரி என, எந்த தகவலும் இல்லை. ஆனால், நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மாதக்கடைசி என்பதால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, இந்த குறுஞ்செய்தியால் நிறுவனங்களில் அவசர விடுப்பு எடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

