/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயணியரிடம் நகை பறிப்பு பெரம்பூர் பெண்ணுக்கு வலை
/
பயணியரிடம் நகை பறிப்பு பெரம்பூர் பெண்ணுக்கு வலை
ADDED : ஜூலை 05, 2025 11:57 PM
பெரம்பூர் :பயணியரின் கவனத்தை திசை திருப்பி, ஐந்து சவரன் திருடிய பெரம்பூர் பெண்ணை போலீசார் தேடுகின்றனர்.
மாதவரத்தைச் சேர்ந்தவர் தேவகிருபை, 57; கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை செவிலியர். நேற்று முன்தினம் மாலை, பணி முடித்து, தடம் எண், '29சி' பேருந்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
பெரம்பூர், ஜமாலியா நிறுத்தத்தில் பேருந்தில் ஏறிய ஒரு பெண், தேவகிருபையிடம், 'உங்கள் செயின் அறுந்துள்ளது.
'அதை கழற்றி பத்திரமாக பையில் வைத்துக் கொள்ளுங்கள்' என கூறியுள்ளார். அதை நம்பிய தேவகிருபை, 3.5 சவரன் செயினை கழற்றி, தன் பையில் வைத்தார்.
அடுத்த சில நிமிடங்களில், சில்லரைகளை தவறவிட்ட அப்பெண், அதை எடுத்துத்தரும்படி தேவகிருபையிடம் கூறியுள்ளார். அவரும், விழுந்த சில்லரையை எடுத்து கொடுத்துள்ளார்.
பெரம்பூர் ரயில் நிலையம் அருகே, பேருந்தில் இருந்து அப்பெண் இறங்கிவிட்டார். வீட்டுக்கு வந்த தேவகிருபை, பையில் இருந்த செயினை பார்த்தபோது, அது மாயமாகி இருந்தது.
மற்றொரு சம்பவம்
பெரம்பூர், துளசிங்கம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மோகனா, 44; ரெட்டேரி அரசு பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் பணி முடித்து, ரெட்டேரி அருகே ஷேர் ஆட்டோவில் ஏறினார். பெரம்பூர், லுார்து பள்ளி அருகே, குழந்தையுடன் ஒரு பெண், ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார்.
அப்போது, 'குழந்தையை சிறிதுநேரம் வைத்துக்கொள்ளுங்கள்' என, மோகனாவிடம் குழந்தையை தந்துள்ளார். பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பில் மோகனா இறங்கியபோது, அவர் அணிந்திருந்த 1.5 சவரன் செயின் காணாமல் போனது தெரிந்தது.
இரு சம்பவங்கள் குறித்தும், இரு புகார்கள் குறித்து விசாரிக்கும் செம்பியம் போலீசார், இரு சம்பவத்திலும் ஒரே நபர் கைவரிசை காட்டியிருக்கலாம் என்றனர். 'சிசிடிவி' கேமரா காட்சிகளை சேகரித்து, அப்பெண்ணை தேடி வருகின்றனர்.