/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மலைப்பகுதியில் வீடு கட்ட அனுமதி: இழுத்தடிக்கும் அதிகாரிகளால் அவதி
/
மலைப்பகுதியில் வீடு கட்ட அனுமதி: இழுத்தடிக்கும் அதிகாரிகளால் அவதி
மலைப்பகுதியில் வீடு கட்ட அனுமதி: இழுத்தடிக்கும் அதிகாரிகளால் அவதி
மலைப்பகுதியில் வீடு கட்ட அனுமதி: இழுத்தடிக்கும் அதிகாரிகளால் அவதி
ADDED : மே 21, 2025 12:38 AM
சென்னை:நீலகிரி உள்ளிட்ட மலை மாவட்டங்களில், கட்டுமான திட்ட அனுமதி வழங்குவதில், அதிகாரிகள் தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை பெருநகருக்கு வெளியே உள்ள பகுதிகளில், கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் அதிகாரம், உள்ளாட்சிகள் மற்றும் நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி.,க்கு உள்ளது.
இதில், மலைப் பகுதிகளில், அங்குள்ள இயற்கை வளத்துக்கு பாதிப்பு ஏற்படாமல், கட்டுமான திட்டங்களை முறைப்படுத்த வேண்டியுள்ளது.
இதற்காக, மலைப்பகுதிகள் பாதுகாப்பு குழுமம் வாயிலாக, கட்டுமான திட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதில் சிறிய அளவிலான குடியிருப்புகள் கட்டுவதற்கு, உள்ளாட்சி அமைப்புகளே ஒப்புதல் வழங்க முடியும்.
ஆனால், மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதல் அடிப்படையிலேயே, அனைத்து கட்டட அனுமதியும்மேற்கொள்ளப்படும். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கட்டுமான திட்ட அனுமதிக்கான விண்ணப்பங்கள் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்வதாக கூறப்படுகிறது.
கட்டட அனுமதி விவகாரத்தில், உள்ளாட்சி அமைப்புகளை தாண்டி, ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் தலையிடுவதால், பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
கோவை, நீலகிரி உள்ளிட்ட, 16 மாவட்டங்களில், 43 தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகள் மலைப்பகுதி பாதுகாப்பு குழும கட்டுப்பாட்டில் வருகின்றன.
இப்பகுதிகளில், கட்டுமான திட்ட அனுமதி வழங்குவதில், ஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே, அனைவரும் விண்ணப்பங்களை தாக்கல் செய்கிறோம். இதில் உள்ளாட்சி அதிகாரிகள் நிலையில் பணிகள் உரிய காலத்தில் முடிக்கப்படுவது இல்லை.
இதனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத சிறிய அளவிலான குடியிருப்பு திட்டங்கள், சாதாரண வீடுகள் கட்டும் பணிகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மலைப்பகுதிகளில் கட்டுமான திட்ட அனுமதிக்கு கால வரம்பு நிர்ணயித்து, அதை அனைத்து துறையினரும் கடைப்பிடிக்க, டி.டி.சி.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கூறினார்.