sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பெருங்குடி குப்பை கிடங்கால் உயிருக்கு... அச்சுறுத்தல்! மாசு அதிகரித்து நிலத்தடி நீரும் பாதிப்பு

/

 பெருங்குடி குப்பை கிடங்கால் உயிருக்கு... அச்சுறுத்தல்! மாசு அதிகரித்து நிலத்தடி நீரும் பாதிப்பு

 பெருங்குடி குப்பை கிடங்கால் உயிருக்கு... அச்சுறுத்தல்! மாசு அதிகரித்து நிலத்தடி நீரும் பாதிப்பு

 பெருங்குடி குப்பை கிடங்கால் உயிருக்கு... அச்சுறுத்தல்! மாசு அதிகரித்து நிலத்தடி நீரும் பாதிப்பு


ADDED : டிச 06, 2024 12:22 AM

Google News

ADDED : டிச 06, 2024 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்குடி குப்பைக் கிடங்கால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, சுற்றுவட்டார பகுதி மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகி வருவதால்,மாநகராட்சி நிர்வாகம், குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதி அமைந்துள்ளது. கடந்த 1965ல், 5,500 ஹெக்டேராக இருந்த சதுப்பு நிலப்பரப்பு, 600 ஹெக்டேராக சுருங்கிவிட்டது. சதுப்பு நிலத்தை அரசு நிறுவனங்கள், 100 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமித்துள்ளன.

மேலும், 1,085 தனியார் குடியிருப்புகள் ஆக்கிரமித்துள்ள விபரம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளது.

சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட குப்பை கிடங்கில், 40 ஆண்டுகளாக குப்பை கொட்டப்பட்டு வருகிறது. தற்போது, 35 லட்சம் கன மீட்டர் அளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளது.

தினமும் 2,600 டன்


சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை தினசரி, 5,200 டன் குப்பை சேகரமாகி வருகிறது. அதில், பெருங்குடி குப்பை கிடங்கில், ஒன்பது முதல் 15 வரையிலான ஆறு மண்டலங்களில் தினசரி சேகரமாகும், 2,600 டன் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.

இதில், வீட்டு குப்பை மட்டுமின்றி, தொழிற்சாலை கழிவுகள், மருத்துவ, ரசாயன, எலக்ட்ரானிக் கழிவுகள் என, கலவையாக கொட்டப்படுகிறது. இதனால், 4 கி.மீ., சுற்றளவில், நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நீரை பயன்படுத்தினால், மக்கள் பல்வேறு நோய்களால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக, சமீபத்திய ஆய்வில் முடிவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நோய் தாக்குதல்


குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் மீத்தேன் உள்ளிட்ட ரசாயனத்தால், திடீர், திடீரென தீ விபத்து ஏற்படுவது வாடிக்கை. அதன், நச்சுப்புகை பெருங்குடி, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, விஜயநகர், வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி ஆகிய பகுதிகளில், காற்றில் கலந்துவிடுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள், அப்பகுதிக்கு வந்து செல்வோர், சுவாச நோய்கள், மூச்சு திணறல், ஆஸ்துமா, தோல்நோய், முடி உதிர்தல், பெண்களுக்கு குறை பிரசவம், தாய்ப்பாலில் நச்சு, குழந்தைகளுக்கு இதயநோய் போன்ற பாதிப்புகளில் சிக்குகின்றனர்.

பறவைகளும் பாவம்


சதுப்பு நிலத்தில், 110 நாட்டு மீன் இனங்கள் உள்ளன. நீலத் தாழைக்கோழிகள், நாமக்கோழிகள், முக்குளிப்பான்கள், சாம்பல் கதிர்க்குருவி, கரிச்சான், சீழ்க்கைச் சிறகி என, 130 வகையான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகளின் புகழிடமாக சதுப்பு நிலம் உள்ளது. குப்பை கிடங்கால் இந்த உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.

சதுப்பு நில பாதுகாப்பு இயக்கங்களும், அப்பகுதி மக்களும் குப்பை கிடங்கை முழுமையாக அகற்ற, பல ஆண்டுகளாக போராடி வருகின்றன.

வாக்குறுதி அளித்தவர்கள் ஜெயித்தபின் மறந்து விட்டாலும் போராட்டம் தொடர்ச்சி 4ம் பக்கம்

ஆபத்து!

முதல் பக்க தொடர்ச்சி

தொடர்கிறது. இதன் பலனாக, எஞ்சியுள்ள நீர்நிலை பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதி என, 2007ல் அறிவித்தது.

பூங்காவிற்கு எதிர்ப்பு


கடந்த, 2022ல் குப்பை கிடங்கால் ஏற்படும் பாதிப்பை குறைக்க, 150 கோடி ரூபாய் செலவில், 'பயோமைமிங்' செய்து, மீட்கப்பட்ட நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க, 93 ஏக்கர் பரப்பில், 99 கோடி ரூபாயில், பல்லுயிர் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிடப்பட்டது.

இதற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற மக்கள், பூங்கா அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மீட்கப்பட்ட இடம் இயற்கையான சதுப்பு நிலமாகவே பராமரிக்க வலியுறுத்தினர்.

அதன்பின், 'பயோ மைனிங்' முறையில் களையப்பட்டு, அவற்றில் இருந்து கல், மணல், இரும்பு, மரக்கட்டை, கண்ணாடி, ரப்பர், பிளாஸ்டிக் தனித்தனியாக பிரித்து மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்த பணி, 351 கோடி ரூபாயில், 11 மையங்கள் வாயிலாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொதுமக்களின் சுகாதாரத்திற்கு சவால் விடும் பெருங்குடி குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற அரசும், மாநகராட்சியும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சமூக ஆர்வலரும், துரைப்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்க தலைவருமான பிரான்சிஸ் கூறியதாவது:

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை, 'பயோமைனிங்' வாயிலாக மீட்டெடுத்தபின், மாநகராட்சிக்கு தானமாக கொடுத்த, 445 ஏக்கர் நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்ய வேண்டும். அந்த இடத்தை சதுப்பு நிலமாகவே மாற்ற வேண்டும் என, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாநகராட்சி புறம்தள்ளிவிட்டது.

கிடங்கில் குப்பை அகற்றி நிலத்தை மீட்டெடுத்த இடத்தில், ஒருங்கிணைந்த குப்பை பதப்படுத்தும் நிலையம் அமைத்து, குப்பை பிரிக்கும் ஆலை, மின் உற்பத்தி, இயற்கை எரிவாயு மையம் ஆகியவற்றை மாநகராட்சி அமைப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகவே தெரிய வந்தது.

பள்ளிக்கரணை சதுப்புநிலம் ராம்சார் தள அனுமதி பெற்றது. அங்கு எந்தவித கட்டுமானங்களும் பயன்படுத்த கூடாது. லட்சக்கணக்கான மக்களின் நலன் கருதி, இதுபோன்ற திட்டங்களை கைவிட்டு, மக்கள் வசிக்காத மாநகரருக்கு வெளி பகுதிகளில் செயல்படுத்தலாம்.

புதைந்துள்ள குப்பையை, 'பயோ மைனிங்' முறையில் முழுமையாக அகற்ற வேண்டும்; குப்பை கொட்டுவதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆதம்பாக்கத்திலும் பாதிப்பு

ஆலந்துார் மண்டலம், 163வது வார்டு, நியூகாலனி முதல் தெருவில், உரிமையாளர் யார் என்று தெரியாமல், ஆறு கிரவுண்டுக்கும் மேற்பட்ட இடம் காலியாக உள்ளது. இரண்டு ஆண்டுகளாக சுற்று வட்டார பகுதியில் சேகரமாகும் ரப்பீஷ் கொட்டப்பட்டது. பின், குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு, தற்போது குப்பைக் கிடங்காக மாறிவிட்டது. திருமண மண்டப கழிவுகள், இறைச்சி, மீன் கழிவுகள், மருத்துவ கழிவுகள் அதிகம் கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு சுவாசப் பிரச்னை, தோல் நோய் ஏற்படுகிறது. இரவு நேரத்தில், லாரிகள் வாயிலாக கழிவுநீரும் கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. போதை கும்பலின் புகலிடமாகவும் மாறிவிட்டதால், அச்சாலை வழியே செல்ல பள்ளி, கல்லுாரி மாணவியர் மற்றும் பெண்கள் அச்சமடைகின்றனர்.எனவே, அந்த இடத்தில் உள்ள வாகனங்கள், ரப்பீஷ் முழுமையாக அகற்ற வேண்டும். அங்குள்ள குப்பை தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.அந்த இடத்தை முழுமையாக சுத்தப்படுத்தி, இளைஞர்களின் வசதிக்காக இறகுப்பந்து, வாலிபால் போன்ற விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



-- நமது நிருபர்- -






      Dinamalar
      Follow us