/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.நகர் இரும்பு பாலம் ஏப்ரலில் திறக்க திட்டம்
/
தி.நகர் இரும்பு பாலம் ஏப்ரலில் திறக்க திட்டம்
ADDED : பிப் 10, 2025 03:15 AM

தி.நகர்:தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்து அண்ணா சாலை வரை, புதிய மேம்பாலம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. இதற்கான பணிகள் 2023 மார்ச்சில் துவக்கப்பட்டன.
தி.நகர், துரைசாமி சாலை - உஸ்மான் சாலை சந்திப்பு மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சாய்தளத்தை, ஜி.ஆர்.டி., ஜுவல்லரி அருகே தகர்த்து, அங்கிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக, அண்ணா சாலை சந்திப்பு வரை, 1.2 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
இந்த மேம்பாலம் 131 கோடி ரூபாய் மதிப்பீடில், 50 துாண்களுடன், 7.5 மீட்டர் அகலம் உடைய இருவழிப்பாதையாக அமைகிறது.
இத்திட்டத்தின் இரண்டு கட்ட பணி முடிந்த நிலையில், மூன்றாம் கட்டமாக, பர்கிட் சாலை சந்திப்பில் இருந்து பழைய உஸ்மான் சாலை மேம்பாலம் வரை, 420 மீட்டருக்கு பணி நடந்து வருகிறது. இப்பாலப்பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தி.நகர் இரும்பு மேம்பால பணி 75 சதவீதம் முடிந்துள்ளது. பழைய மற்றும் புதிய மேம்பாலங்களை இணைக்கும் பணி நடந்து வருகிறது. அத்துடன், மேம்பாலத்தில் ஏற இறங்க, சாய்தளம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
வரும் ஏப்., மாத்தில் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

