/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் - செங்கல்பட்டு நெரிசலுக்கு தீர்வு காண புது பாதை அமைக்க திட்டம் மதுராந்தகம் - மாமல்லபுரம் சாலை விரிவாக்கம்
/
தாம்பரம் - செங்கல்பட்டு நெரிசலுக்கு தீர்வு காண புது பாதை அமைக்க திட்டம் மதுராந்தகம் - மாமல்லபுரம் சாலை விரிவாக்கம்
தாம்பரம் - செங்கல்பட்டு நெரிசலுக்கு தீர்வு காண புது பாதை அமைக்க திட்டம் மதுராந்தகம் - மாமல்லபுரம் சாலை விரிவாக்கம்
தாம்பரம் - செங்கல்பட்டு நெரிசலுக்கு தீர்வு காண புது பாதை அமைக்க திட்டம் மதுராந்தகம் - மாமல்லபுரம் சாலை விரிவாக்கம்
ADDED : ஜன 30, 2025 12:51 AM

மாமல்லபுரம்
தாம்பரம் - செங்கல்பட்டு பகுதி, சென்னை நுழைவாயிலாக உள்ளது. பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை வரும் வாகனங்கள், சென்னையிலிருந்து பிற பகுதிகளுக்கு வெளியேறும் வாகனங்கள், நுழைவாயில் பகுதியில் அணிவகுக்கின்றன.
பொங்கல், தீபாவளி ஆகிய பண்டிகை நாட்கள், தொடர் அரசு விடுமுறை நாட்களில், வாகனங்கள் அணிவகுப்பால் இத்தடத்தில் போக்குவரத்து முடங்குகிறது. இத்தகைய சிக்கலுக்கு தீர்வு காண, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், தற்போது முயற்சிக்கிறது.
அதாவது, சென்னையை ஒட்டியுள்ள கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை ஆகிய பகுதிகளுக்கு, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக கடக்கும் வாகனங்களை, மதுராந்தகத்திலிருந்து திருப்பி, மாமல்லபுரம் வழியாக கடக்கும் வகையில் திட்டமிடுகிறது.
இதற்காக, மதுராந்தகம் - மாமல்லபுரம் இடையே, புதிதாக இணைப்புத் தடம் ஏற்படுத்த, சாத்தியக்கூறு குறித்து ஆய்வு நடத்த முடிவெடுத்துள்ளது. இதற்காக, 80 லட்சம் ரூபாய் மதிப்பில், தனியார் ஆலோசனை நிறுவனம் வாயிலாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, ஒப்பந்தம் அறிவித்துள்ளது.
இந்த புதிய வழித்தடம், மதுராந்தகத்திலிருந்து, 4 கி.மீ., தொலைவில் உள்ள கருங்குழி, கக்கிலப்பேட்டையில் துவங்கி, திருக்கழுக்குன்றம் வழியாக மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியில் முடியும். 32 கி.மீ.,யில், திருக்கழுக்குன்றத்திற்கு சற்று வெளிப்பகுதியில் இப்பாதை கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.
மாமல்லபுரத்தில், இத்தடம் இணையும் பூஞ்சேரி பகுதியில், மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, பழைய மாமல்லபுரம் சாலை ஆகியவை இணைகின்றன.
மேலும், எண்ணுார் - மாமல்லபுரம் இடையே அமையும் புதிய சாலையும், இங்கு இணைகிறது. இங்கிருந்து 3 கி.மீ., தொலைவில், சென்னை - மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையும் அமைந்துள்ளது.
மதுராந்தகம் - மாமல்லபுரம் புதிய சாலையால் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலையிலிருந்து திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைக்கு, நேரடி இணைப்பு ஏற்படும். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய பகுதிக்கும் இணைப்பு ஏற்படும்.
எனவே, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வல்லிபுரம் பாலத்திற்குதீர்வு வரும்
மதுராந்தகம் அடுத்த கருங்குழி - பூஞ்சேரி இடையே, புதிதாக இணைப்புச் சாலை ஏற்படுத்த, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவெடுத்து உள்ளது. அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய, 80 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் அறிவித்து உள்ளது. சாத்தியக்கூறு இருந்தால், இதை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும்.
- நெடுஞ்சாலைத் துறை அதிகாரி.