/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியார் பள்ளியில் மீண்டும் விஷ வாயு கசிவு வாந்தி, மயக்கத்தால் 10 மாணவியர் பாதிப்பு
/
தனியார் பள்ளியில் மீண்டும் விஷ வாயு கசிவு வாந்தி, மயக்கத்தால் 10 மாணவியர் பாதிப்பு
தனியார் பள்ளியில் மீண்டும் விஷ வாயு கசிவு வாந்தி, மயக்கத்தால் 10 மாணவியர் பாதிப்பு
தனியார் பள்ளியில் மீண்டும் விஷ வாயு கசிவு வாந்தி, மயக்கத்தால் 10 மாணவியர் பாதிப்பு
ADDED : நவ 05, 2024 12:36 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர், கிராமத்தெருவில் செயல்படும் விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், 1,500 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
கடந்த அக்., 25ம் தேதி, பள்ளி வளாகத்தில் விஷ வாயு கசிவு ஏற்பட்டதில், 45 பேர் வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, தனியார் பள்ளி வளாகத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முகாமிட்டு, காற்றின் தரம் கண்காணிக்கும் இயந்திரங்களை கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், எதனால் பாதிப்பு என்பது 10 நாட்களாகியும் தெரியவில்லை.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து, நேற்று காலை பள்ளி திறக்கப்பட்டு, வழக்கம் போல் செயல்பட துவங்கியது.
அதேநேரம், விஷ வாயு கசிவு குறித்து எந்தவொரு விளக்கமும் தராமல் பள்ளியை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் மற்றும் கவுன்சிலர் கார்த்திக் பள்ளி நிர்வாகத்துடன் பேச்சில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு மாணவி திடீரென, வாந்தி, மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டார்.
அங்கு கூடியிருந்த பெற்றோர் மாணவியை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதை தொடர்ந்து, அடுத்தடுத்து மாணவியர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டதால், உடனடியாக ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு, மாணவியரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதில், திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனையில் ஐந்து மாணவியரும், ஆகாஷ் மருத்துவமனையில் மூன்று மாணவியரும், சுகம் மருத்துவமனையில் இரு மாணவியரும், என, 10 மாணவியர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து அறிந்து, மாணவ - மாணவியரின் பெற்றோர் பள்ளி முன் குவிந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
அங்கு வந்த திருவொற்றியூர் தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், 'யாரை கேட்டு பள்ளியை திறந்தீர்கள்' என, நிர்வாகத்தை கண்டித்தார். மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமிஷனர் கட்டா ரவி தேஜா, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், தனியார் பள்ளி கல்வி இயக்குனர் முத்துசாமி ஆகியோர், பாதிக்கப்பட்ட மாணவியரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, பள்ளி வளாகத்தை ஆய்வு செய்தனர்.
பதற்றமான சூழல் நிலவியதால், வண்ணாரப்பேட்டை காவல் துணை கமிஷனர் சக்திவேல் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
இரவு நிலவரப்படி, அரசு மருத்துவமனையில் மட்டும் நான்கு மாணவியர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மறு அறிவிப்பு வெளியாகும் வரை, பள்ளி செயல்பட வாய்ப்பில்லை என தாசில்தார் சகாயராணி தெரிவித்தார்.