/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் விஷ வாயு கசிவு 45 மாணவியர் வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறலால் பாதிப்பு
/
திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் விஷ வாயு கசிவு 45 மாணவியர் வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறலால் பாதிப்பு
திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் விஷ வாயு கசிவு 45 மாணவியர் வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறலால் பாதிப்பு
திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் விஷ வாயு கசிவு 45 மாணவியர் வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறலால் பாதிப்பு
ADDED : அக் 26, 2024 03:33 AM

சென்னை:சென்னை, திருவொற்றியூர், கிராமத்தெருவில், விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 1,500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
நேற்று மதியம், உணவு இடைவேளைக்கு பின் பள்ளி கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் செயல்பட்டு வரும், 8, 9, 10ம் வகுப்பறைகளில், திடீரென காற்றில் கசிந்த வாயுவால் அங்கு அமர்ந்திருந்த மாணவியருக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்து மாணவியர், வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்படவே, பள்ளி ஆசிரியர்கள் அவர்களை மீட்டு திருவொற்றியூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
அதன்படி, திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனையில் 33 பேர்; ஆகாஷ் மருத்துவமனையில் நான்கு பேர்; சுகம் மருத்துவமனையில் ஆறு பேர் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இரண்டு பேர் என, 45 மாணவியர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதன்படி, அரசு பொது மருத்துமனை பொறுப்பு அலுவலர் மனோஷ்குமார், மண்டல மருத்துவ அலுவலர் மாலதி, நல அலுவலர் லீனா உள்ளிட்டோர் தலைமையிலான எட்டு மருத்துவர்கள் கொண்ட குழுவினர், மாணவியருக்கு முதலுதவி உள்ளிட்ட சிகிச்சைகளை வழங்கினர்.
சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர், உறவினர்கள், பள்ளி வளாகம் மற்றும் மருத்துவமனை முன் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பதற்றமான சூழல் நிலவியது.
பள்ளி வளாகத்தில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர். திருவொற்றியூர் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தகவலறிந்து, வடசென்னை எம்.பி., கலாநிதி, திருவொற்றியூர் எம்.எல்.ஏ., சங்கர், மண்டல குழு தலைவர் தனியரசு, வண்ணாரப்பேட்டை காவல் துணை கமிஷனர் சக்திவேல்.
திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன், கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர், சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.
நேற்று காலை 10:45 மணிக்கு லேசான, நெடி இருந்த நிலையில், மதியம் உணவு இடைவேளைக்கு பின் அதிக நெடி ஏற்பட்டு, வாந்தி, மயக்கம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, எங்களை மருத்துவமனையில் அனுமதித்து விட்டனர்.
- ஜெஸ்லின், 10ம் வகுப்பு மாணவி
திடீரென காற்றில் கலந்த நெடியால், மூச்சு திணறல், படபடப்பு, பயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், படபடப்பு குறையவில்லை.
- விஸ்மயா, 10ம் வகுப்பு மாணவி.
என் மகள், நிகிதாஸ்ரீ, 10ம் வகுப்பு படிக்கிறாள். பள்ளி நிர்வாகத்திடம் இருந்து, திடீர் மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. பதற்றத்துடன் வந்து பார்த்தால், டிரிப்ஸ் ஏற்றிக் கொண்டு இருக்கின்றனர். பாதிப்பு குறித்து, ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுமதி, 45, திருவொற்றியூர்.
9 பேர் சிகிச்சையில்
இங்கு, 33 மாணவியர் அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலும், காற்றில் பரவிய நெடியால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மூச்சு திணறல் அதிகம் இருந்த மாணவி உட்பட இருவர் மட்டும் மேல்சிகிச்சைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாலை நிலவரப்படி, சிகிச்சை முடிந்து பல மாணவியர் வீட்டிற்கு சென்று விட்டனர். தற்போது, ஒன்பது பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மனோஷ்குமார், அரசு பொது மருத்துவமனை பொறுப்பு அலுவலர்
விளக்கம்
சம்பவம் குறித்து, தாசில்தார் சகாயராணி பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, வேதியியல் ஆய்வகத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
மாணவியர் நலமாக உள்ளனர்
சிகிச்சை குறித்து ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாவது:
ரசாயன
வாயு கசிவால் பாதிக்கப்பட்ட விக்டரி பள்ளியைச் சேர்ந்த இரு மாணவியர், உயர்
சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர்.
முறையே, 10ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு
பயிலும் அந்த இரு மாணவியருக்கும் எக்ஸ் - ரே, சி.டி., ஸ்கேன், நுரையீரல்
செயல் திறன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. எந்த பிரச்னையும் இல்லை.
அச்சத்தில்
சிறிது நேரம் அவர்களுக்கு சுவாசிப்பதில் பிரச்னை இருந்துள்ளது. அதன் பின்
இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். ஒருநாள் மருத்துவக் கண்காணிப்புக்குப்
பின், அவர்கள் வீடு திரும்புவர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.