/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆண்டவர் கோவில் சாலை ஆக்கிரமிப்புகள் நிரந்தரமாக நீக்க போலீசார் முயற்சி
/
ஆண்டவர் கோவில் சாலை ஆக்கிரமிப்புகள் நிரந்தரமாக நீக்க போலீசார் முயற்சி
ஆண்டவர் கோவில் சாலை ஆக்கிரமிப்புகள் நிரந்தரமாக நீக்க போலீசார் முயற்சி
ஆண்டவர் கோவில் சாலை ஆக்கிரமிப்புகள் நிரந்தரமாக நீக்க போலீசார் முயற்சி
ADDED : மார் 04, 2024 01:37 AM

வடபழனி ஆண்டவர் கோவில் முகப்பு சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற, சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு, போக்குவரத்து போலீசார் காலக்கெடு அளித்துள்ளனர். ஆக்கிரமிப்பில், அப்பகுதி கவுன்சிலரின் தலையீடு இருப்பதால், அவர் குறித்த புகார் மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற, நுாற்றாண்டு பழமை வாய்ந்த வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு தினமும், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
வார விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆற்காடு சாலையில் இருந்து கோவில் முகப்பிற்குச் செல்லும் பிரதான சாலையாக, ஆண்டவர் தெரு உள்ளது.
இந்த தெருவின் இருபுறமுள்ள கடைகள், நடைபாதை மற்றும் சாலையை முழுமையாக ஆக்கிரமித்துள்ளன.
சில விடுதிகளில், சமையல் காஸ் சிலிண்டர்களை ஆபத்தான முறையில் நடைபாதையில் வைத்து, உணவு சமைக்கின்றனர். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால், பக்தர்கள் கோவில் நுழைவாயிலை அடையவே முடியாத நிலை ஏற்படுகிறது.
சாதாரண நாட்களிலேயே நெரிசல் ஏற்படும் நிலையில், திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் இத்தெருவே ஸ்தம்பித்து விடும்.
பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட ஆண்டவர் தெரு நடைபாதையை புனரமைக்க கோரிக்கை விடுத்தும், மாநகராட்சி கண்டுகொள்ளவில்லை. ஆண்டவர் தெருவில் நாளுக்கு நாள், ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.
இதற்கு காரணம், சம்பந்தப்பட்ட உள்ளூர் தலைவர்கள், மாநகராட்சி அலுவலர்களுக்கு தினமும், மாதா மாதம் மாமூல் கொடுப்பது தான் என, ஆக்கிரமிப்பாளர்கள் வெளிப்படையாக கூறுகின்றனர்.
இந்நிலையில், வடபழனி போக்குவரத்து ஆய்வாளர் அய்யப்பன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார், ஆண்டவர் தெருவில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளுக்கும், நேற்று எச்சரிக்கை விடுத்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற, காலக்கெடுவும் விதித்துள்ளனர்.
மேலும், பக்தர்களின் வாகனங்களை நிறுத்த, கோவில் நிர்வாகம் உரிய 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, போக்குவரத்து துறை சார்பில் கோரப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புவளர காரணம்
வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை பொறுத்து, ஆண்டவர் தெருவில் அவ்வப்போது புதிய பிளாட்பார கடைகள் முளைக்கும்.
மாநகராட்சி, போலீசார் என, அனைவரையும் கடைக்காரர்கள் சமாளிப்பர். மேலிட உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை அகற்றினால், அடுத்த சில மணிநேரத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு முளைத்துவிடும். இதற்கு முக்கிய காரணம். அந்த வார்டு கவுன்சிலரின் தலையீடு அதிகம் இருப்பது தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆக்கிரமிப்பாளர்கள் இவரை 'கவனித்து' விடுவதால், எந்த பிரச்னை வந்தாலும் ஆக்கிரமிப்பு மட்டும் அகற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி, அறநிலையத்துறை, தலைமைச் செயலகம், முதல்வர் தனி பிரிவிற்கும் புகார்கள் பறந்துள்ளதாக கூறப்படுகிறது.
- -நமது நிருபர் --

