/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைமுறைக்கு வந்தது காவல் ஆணையம் பரிந்துரை
/
நடைமுறைக்கு வந்தது காவல் ஆணையம் பரிந்துரை
ADDED : நவ 05, 2025 02:46 AM
சென்னை: காவல் நிலைய அதிகாரிகள், போலீசாருக்கு பாரபட்சமின்றி விடுமுறை தர வேண்டும் என்பது உள்ளிட்ட காவல் ஆணையத்தின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தி, தமிழக பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி செல்வம் தலைமையில் ஐந்தாவது காவல் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. ஆள்சேர்ப்பு முதல் ஓய்வு வரை உள்ள பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட இந்த ஆணையம், இது தொடர்பான அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.
அதில் கூறப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, தமிழக பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
காவல் நிலையங்களில் தினமும் 'ரோல் கால்' நடத்த வேண்டும். தங்களுக்கு கீழ் பணிபுரிவோரிடம் அதிகாரிகள் தொடர்பில் இருக்க வேண்டும்; அவர்களுடன் கலந்துரையாடல் நடத்த வேண்டும்.
காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாரை மரியாதையுடன் நடத்த வேண்டும். அவர்களின் சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தக்கூடாது.
அனைவருக்கும் சமமான பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும். காவல் நிலைய அதிகாரிகள், தங்களுக்கு கீழ் பணிபுரியும் போலீசாருக்கு பாரபட்சமின்றி விடுமுறை தர வேண்டும்.
எஸ்.பி.,க்கள் மற்றும் கமிஷனர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரிவோரிடம் பேச வாரம் ஒரு முறை நேரம் ஒதுக்க வேண்டும். அதற்கு பிரத்யேக தொலைபேசி வசதியை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

