/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணுக்கு ஆர்.டி.ஓ., மூலமாக பாதுகாப்பு ஆணை வாலிபரிடம் நன்னடத்தை பத்திரம் பெற்ற போலீசார்
/
பெண்ணுக்கு ஆர்.டி.ஓ., மூலமாக பாதுகாப்பு ஆணை வாலிபரிடம் நன்னடத்தை பத்திரம் பெற்ற போலீசார்
பெண்ணுக்கு ஆர்.டி.ஓ., மூலமாக பாதுகாப்பு ஆணை வாலிபரிடம் நன்னடத்தை பத்திரம் பெற்ற போலீசார்
பெண்ணுக்கு ஆர்.டி.ஓ., மூலமாக பாதுகாப்பு ஆணை வாலிபரிடம் நன்னடத்தை பத்திரம் பெற்ற போலீசார்
ADDED : ஜூலை 13, 2025 12:10 AM
சென்னை :பெண் வன்கொடுமையில் சிக்கிய வாலிபரால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த தொந்தரவும் வராத வகையில், நன்னடத்தை பத்திரம் பெற்று, ஆர்.டி.ஓ., மூலமாக பாதுகாப்பு ஆணையை போலீசார் வழங்கியுள்ளனர்.
பெண்ணுக்கு பாதுகாப்பு ஆணை வழங்கும் புதிய முயற்சி மேற்கொள்வது, சென்னையில் இதுவே முதல் முறை.
சென்னை, மதுரவாயலைச் சேர்ந்த 27 வயது பெண், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இரண்டு ஆண்டுகளாக ஜாகீர் உசேன் என்பவருடன் பழகி வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு பெண் விலகினார்.
பெண்ணுக்கு, அவரது வீட்டினர் மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்த ஜாகீர் உசேன், தன்னுடன் பழகியபோது எடுத்த புகைப்படங்களை காட்டி, திருமணத்தை நிறுத்திவிடுவேன் என, மிரட்டி வந்தார்.
பாதிக்கப்பட்ட பெண், மதுரவாயல் காவல் நிலையத்தில், இதுகுறித்து புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், ஜூன் 24ல், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜாகீர் உசேன், 32, என்பவரை கைது செய்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, வாலிபர் தொல்லை கொடுப்பதை தடுக்கும் வகையில், பாதுகாப்பு ஆணை வழங்கும் புதிய முயற்சியை போலீசார் மேற்கொண்டனர்.
அதாவது, 'பாதிக்கப்பட்ட பெண்ணிடம் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள மாட்டேன்; தொந்தரவும் தர மாட்டேன்; நன்னடத்தையுடன் செயல்படுவேன்' என, ஆர்.டி.ஓ., மூலமாக, பிரமாண உறுதி பத்திரம் பெறுவதுதான் அந்த நடைமுறை.
போலீசார் பரிந்துரைப்படி, மத்திய சென்னை ஆர்.டி.ஓ., இருதரப்பிலும் விசாரணை நடத்தினார். பின், ஜாகீர் உசேனிடம் இருந்து, பிரமாண பத்திரம் மூலமாக உத்தரவாதம் பெற்றார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ., பிறப்பித்த பாதுகாப்பு ஆணை உத்தரவு, போலீசார் மூலமாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்கப்பட்டது.
அதன்படி,
ஓராண்டு காலத்திற்கு பாதிக்கப்பட்ட பெண்ணை, அவருடன் தொடர்புடையோரை நேரடியாகவோ, வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ, மின்னனு சாதனங்கள் மூலமாகவோ தொடர்பு கொள்ளக்கூடாது
ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் சூழல் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து நல்ல இடைவெளி விட்டு செல்ல வேண்டும்
பாதிக்கப்பட்ட நபரின் சமூக வலைதள நடவடிக்கைகளையும் பின்தொடரக்கூடாது. இந்த பாதுகாப்பு உத்தரவாதம், ஜூலை 11 முதல் அடுத்த ஆண்டு ஜூலை, 10 வரை அமலில் இருக்கும்.
பாதுகாப்பு ஆணை உத்தரவை, ஆர்.டி.ஓ., நேற்று முன்தினம் வழங்கினார். இந்த பாதுகாப்பு ஆணை, போலீசார் மூலமாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெண்ணுக்கான எந்த வகையிலும் வாலிபர் தொல்லை கொடுக்க முடியாது. மீறினால், சட்டரீதியான தண்டனை கிடைக்கும்.
மூன்றாண்டு சிறை
பாதுகாப்பு உத்தரவு ஆணையை மீறினால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சென்னை காவல் துறையில் முதன் முறையாக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு ஆணை பெற்றுத்தரப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
- அருண்,
சென்னை போலீஸ் கமிஷனர்

