/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சண்டையை சமாதானம் செய்தவரை துன்புறுத்திய போலீசுக்கு அபராதம்
/
சண்டையை சமாதானம் செய்தவரை துன்புறுத்திய போலீசுக்கு அபராதம்
சண்டையை சமாதானம் செய்தவரை துன்புறுத்திய போலீசுக்கு அபராதம்
சண்டையை சமாதானம் செய்தவரை துன்புறுத்திய போலீசுக்கு அபராதம்
ADDED : மே 08, 2025 10:35 PM
சென்னை:சண்டையை சமாதானம் செய்த ஊராட்சி முன்னாள் துணைத் தலைவரை, காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்திய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரருக்கு, 1 லட்சம் ரூபாய் அபாரதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடலுார் மாவட்டம் ஆண்டிகுப்பத்தில் வசிக்கும், அன்னவள்ளி ஊராட்சி முன்னாள் துணை தலைவர் வைத்திலிங்கம், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
கடலுார் முதுநகர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் சுதாகருக்கும், சண்முகம் என்பவருக்கும் இடையே, 2018 நவ., 5ம் தேதி வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், தலையிட்டு, இருவரையும் சமாதானம் செய்தேன்.
இதனால், கோபம் அடைந்த போலீஸ்காரர் சுதாகர், என் மோட்டார் சைக்கிள் சாவியை பறித்துக்கொண்டு, சண்முகத்தை காவல் நிலையம் அழைத்து சென்றார்.
அப்போது, அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ஏழுமலை, என்னை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, சட்டவிரோதமாக அடைத்து வைத்து, அவதுாறாக பேசி திட்டினார். இரவு 11:00 மணிக்கு என்னை விடுவித்தார். மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை, நேற்று விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு:
ஆணையம் நடத்திய விசாரணையில், மனுதாரர் வைத்திலிங்கத்தை சட்டவிரோதமாக இரவு 11:00 மணி வரை காவல் நிலையத்தில் வைத்து, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, மனுதாரர் வைத்திலிங்கத்திற்கு, தமிழக அரசு இழப்பீடாக, 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இத்தொகையை இன்ஸ்பெக்டர் ஏழுமலை, போலீஸ்காரர் சுதாகர் ஆகியோரிடம் இருந்து, தலா, 50,000 ரூபாய் வீதம் வசூலித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.