/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டோரை திட்டம் போட்டு துாக்கிய போலீசார்
/
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டோரை திட்டம் போட்டு துாக்கிய போலீசார்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டோரை திட்டம் போட்டு துாக்கிய போலீசார்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டோரை திட்டம் போட்டு துாக்கிய போலீசார்
ADDED : ஆக 21, 2025 01:19 AM
சென்னை, ஐஸ்ஹவுசில் உயர்ரக ஓ.ஜி., கஞ்சா விற்பனை செய்வதற்காக ஆட்களை தேடிக் கொண்டிருந்த இருவரை, சினிமா பாணியில் திட்டம் போட்டு பிடித்ததுடன், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், ஐஸ்ஹவுஸ் போலீசாருடன் இணைந்து நேற்று முன்தினம், உயர்ரக ஓ.ஜி.,கஞ்சா வைத்திருந்த, முகமது இப்ராஹிம், 32, முகமது தவுபிக், 19 ஆகிய இருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டோரிடம் இருந்து, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஓ.ஜி., கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா வைத்திருந்தவர்களை பிடித்தது எப்படி என்பது குறித்து ஆய்வாளர் ஜானி செல்லப்பா கூறியதாவது :
ஐஸ்ஹவுஸ் பகுதியில் ஓ.ஜி., உயர்ரக கஞ்சா வைத்துக் கொண்டு, வாடிக்கையாளர்களை இருவர் தேடி வருவதாக தகவல் கிடைத்தது. பின் வாடிக்கையாளர்கள் போல அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்.
அப்போது, '1 கிலோ கஞ்சா, நான்கு லட்சம் ரூபாய்' என்றனர். அதற்கு, '3.5 லட்சம் தான் தரமுடியும்' என கறாராக பேசினோம்.
பின் அவர்கள், 3.5 லட்சம் ரூபாய்க்கு ஒப்புக் கொண்டனர்.
ஆனால், 'பணத்தை முதலில் கொடுத்துவிட வேண்டும். கஞ்சாவை மற்றொரு இடத்தில் இன்னொருவர் ஒப்படைப்பார்' என்றனர். பேச்சுக்கு பின், பணத்தை எடுத்துச் செல்பவருடன் ஒருவர் உடன் செல்ல ஒப்புக்கொண்டனர்.
உடனே எட்டு பேர் கொண்ட போலீஸ் குழுவை இரு பிரிவாக பிரித்துக் கொண்டோம். திட்டமிட்டபடி திருவல்லிக்கேணி பாரதி சாலையில் கஞ்சாவை வாங்குவதற்காக ஒரு குழுவினரை அனுப்பிவிட்டு, பணம் கொடுப்பதற்காக வேறு ஒரு குழுவினரை அனுப்பினோம்.
பிறகு கஞ்சா கொடுக்க வந்த முகமது இப்ராஹிமையும், பணத்துடன் சென்ற முகமது தவுபிக் ஆகிய இருவரையும் கைது செய்தோம்.
இப்ராஹிமின் சகோதரர் உசேன் என்பவர், 20 நாட்களுக்கு முன் தாய்லாந்து சென்று அங்கு வாங்கிய கஞ்சாவை கடத்திவந்து, இர்பான் என்பவரிடம் கொடுத்து அனுப்பி உள்ளார். அவற்றை இருவரும் விற்பனை செய்வதற்காக முயன்றபோது, தகவல் கிடைத்து ரகசிய திட்டம் போட்டு, அதன்படி அவர்களை கைது செய்தோம். கைது செய்யப்பட்டோருடன், மேலும் சிலர் தொடர்பில் உள்ளதால், அவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.