/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழல் ஏரிக்கரையை ஆக்கிரமித்து காவல் நிலையம் நீதிமன்ற உத்தரவை கண்டு கொள்ளாத போலீஸ்
/
புழல் ஏரிக்கரையை ஆக்கிரமித்து காவல் நிலையம் நீதிமன்ற உத்தரவை கண்டு கொள்ளாத போலீஸ்
புழல் ஏரிக்கரையை ஆக்கிரமித்து காவல் நிலையம் நீதிமன்ற உத்தரவை கண்டு கொள்ளாத போலீஸ்
புழல் ஏரிக்கரையை ஆக்கிரமித்து காவல் நிலையம் நீதிமன்ற உத்தரவை கண்டு கொள்ளாத போலீஸ்
ADDED : நவ 20, 2025 03:16 AM

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவைமீறி, புழல் ஏரிக்கரை மற்றும் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து, போலீஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள், தனியார் கட்டடங்கள் மட்டுமின்றி, அரசு அலுவலகங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இதனால், பருவமழை காலங்களில் நீரோட்டம் பாதிக்கப்படுகிறது.
வெள்ள பாதிப்பு ஏற்படுவதால், மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றும் கழிவுநீர் மற்றும் குப்பையால், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது.
இதுபோன்ற நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் மற்றும் சோழவரம் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில், கட்டடங்கள் கட்டவும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், அம்பத்துார் அடுத்த சண்முகபுரம் அய்யப்பன் கோவில் அருகே, சென்னை பைபாஸ் சாலை மேம்பாலத்தை ஒட்டி, புழல் ஏரிக்கரை மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிலத்தை ஆக்கிரமித்து, புதுார் போலீஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. ஆவடி மாநகர போலீசாரின் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, அம்பத்துாரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
கொரோனா காலத்தில் ஊரடங்கு நடைமுறை அமலில் இருந்தது. அப்போது, வாகன நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக, புழல் ஏரிக்கரை அருகே, சோதனை சாவடி அமைத்தனர்.
தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கூரையை அகற்றிவிட்டு, கான்கிரீட் கட்டுமானம் செய்து புதுார் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது.
சென்னையில் இருந்து பிரிக்கப்பட்ட ஆவடி மாநகர போலீசாருக்கு, சொத்துக்களை உருவாக்க இதுபோன்று பல இடங்களில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.
வடக்கு உள்வட்ட சாலையில், மாத்துார் சுங்கச்சாவடி அருகே, இதேபோன்று நீர்நிலை மற்றும் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து, சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் இருந்து பேட்டரி, டயர், இன்ஜின் உள்ளிட்டவற்றை பலரும் திருடி விற்று வருகின்றனர். ஆவடி மாநகர போலீசாருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

