/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒப்பந்தம் விடப்பட்டும் பணிகள் துவங்கவில்லை குப்பை அகற்றாததால் பல இடங்களில் சீர்கேடு வளசரவாக்கம் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
/
ஒப்பந்தம் விடப்பட்டும் பணிகள் துவங்கவில்லை குப்பை அகற்றாததால் பல இடங்களில் சீர்கேடு வளசரவாக்கம் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ஒப்பந்தம் விடப்பட்டும் பணிகள் துவங்கவில்லை குப்பை அகற்றாததால் பல இடங்களில் சீர்கேடு வளசரவாக்கம் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ஒப்பந்தம் விடப்பட்டும் பணிகள் துவங்கவில்லை குப்பை அகற்றாததால் பல இடங்களில் சீர்கேடு வளசரவாக்கம் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ADDED : நவ 20, 2025 03:15 AM
வளசரவாக்கம்: 'கடந்த ஓராண்டாக வார்டில் ஒப்பந்தம் விடப்பட்டும் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. பல இடங்களில் குப்பை அகற்றாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது' என, வளசரவாக்கம் மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
வளசரவாக்கம் மண்டலக்குழு கூட்டம், அதன் தலைவர் ராஜன் தலைமையில், மண்டல அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
செல்வகுமார், தி.மு.க., 154வது வார்டு: ஓராண்டாக என் வார்டில் ஒப்பந்தம் விடப்பட்டு, பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மதிப்பீடு தயாரித்து அளித்தும் ஒப்பந்தம் விடப்படவில்லை. அதேபோல் இரு ஆண்டுகளாக கவுன்சிலர் நிதிக்கும் ஒப்பந்தம் விடப்படவில்லை. கூட்டங்களில் கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கைகளில் எவை நிறைவேற்றப்பட்டது எனக்கூறி, புது கூட்டத்தை நடத்த வேண்டும்.
ஸ்டாலின், தி.மு.க., 144வது வார்டு: மதுரவாயல் கந்தசாமி நகரில் உள்ள சில தெருக்களில் மூன்றரை ஆண்டுகளாக, குடிநீர் வசதியில்லை. மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவில், ஒரு புறம் உள்ள தெருக்களில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டது. மற்றொரு புறம் விடுபட்ட 25 தெருக்களில், பாதாள சாக்கடை அமைக்க வேண்டும்.
வக்கீல் தோட்டம், கன்னியப்ப நகர், நாகாத்தம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணப்பு என, அடிப்படை வசதிகள் இல்லை. இவற்றை ஏற்படுத்த வேண்டும். எம்.எம்.டி.ஏ., காலனியில் மாநகராட்சி பள்ளியை உயர்நிலையாக மாற்ற வேண்டும்.
சத்யநாதன், அ.தி.மு.க., 145வது வார்டு: மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று, மக்களுக்கு பணி செய்வதை பெரிய பாரமாக அதிகாரிகள் நினைக்கின்றனர். வார்டில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது. அதை தடுக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெற்குன்றம் என்.டி., படேல் சாலையில் குழாய் உடைந்து குடிநீர் கசிந்து வருகிறது. பூங்கா பராமரிக்க ஒப்பந்தம் விடப்பட்டும் ஆள் வரவில்லை. கவுன்சிலர்கள் கூறும் பிரச்னையை சரி செய்ய முடியவில்லை என்றால், எதற்காக கூட்டத்தை நடத்துகிறீர்கள்.
ரமணி மாதவன், தி.மு.க., 147வது வார்டு: மதுரவாயல் மேட்டுக்குப்பம், பொன்னியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதியில், புது மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சாலையில் இருந்து மழைநீர் வடிந்து செல்ல 'கேட்ச் பிட்' போடப்படவில்லை. பூங்கா பராமரிக்க யாரும் இல்லை. மதுரவாயல், சீமாத்தமன் நகர் தனியார் பள்ளி அருகே குவிந்துள்ள குப்பையை அகற்ற வேண்டும்.
கிரிதரன், அ.ம.மு.க., 148வது வார்டு: மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் என, பொது இடங்களில் உள்ள தெரு நாய்க்களை பிடித்து வேறு இடத்திலோ அல்லது காப்பகத்திலோ விட வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் அடிக்கடி பழுதாகின்றன. அதனால் புதிய இயந்திரங்கள் வாங்க வேண்டும். வார்டில், பழைய குழாயில் குடிநீர் கசிந்து வருகிறது. அதை மாற்றி இரும்பு குழாய் அமைக்க வேண்டும்.
எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிக்கு வரும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடுதோறும் செல்லாமல், ஓரிடத்தில் அமர்ந்து மக்களை வரவழைக்கின்றனர்.
செல்வி ரமேஷ், தி.மு.க., 149வது வார்டு: பிருந்தாவன் நகரில் உள்ள மாநகராட்சி சுடுகாட்டில், 5,000 ரூபாய் அதிகமாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை முறைப்படுத்த வேண்டும்.
சங்கர் கணேஷ், தி.மு.க., 151வது வார்டு: வளசரவாக்கம் சுப்பிரமணிய நகரில் மூன்று மாதங்களாக குடிநீர் வரவில்லை. அங்கு 24 மணி நேரம் குடிநீர் வழங்க குழாய் அமைக்கப்பட்டும், இப்பிரச்னை இருக்கிறது.
போரூர் ஆற்காடு சாலையில், மின் வாரியம் பள்ளம் தோண்டி பணி மேற்கொண்டது. ஆனால், சாலையை முறையாக சீரமைக்கவில்லை. 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பட்டாவிற்கு விண்ணப்பித்தனர். ஆனால், வருவாய் துறை அதை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
சாந்தி ராமலிங்கம், தி.மு.க., 153வது வார்டு: வார்டில் குப்பை முறையாக அகற்றப்படவில்லை. பல இடங்களில் குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது.
குப்பை தொட்டிகளும் பற்றாக்குறையாக உள்ளன. பூங்கா பராமரிக்க ஒப்பந்தம் விடப்பட்டும் ஆட்கள் இன்னும் வரவில்லை.
போரூர் சந்திப்பில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. ஆனால், அதை சுத்தம் செய்ய இன்னும் ஆட்கள் நியமிக்கப்படவில்லை. வார்டில் கொசு மருந்து அடிப்பதில்லை. அதற்கான வண்டியும் இல்லை.
இவ்வாறு அவர்கள் பேசினர்.

