/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிருஷ்ணா கால்வாயில் குளித்த போலீஸ்காரர் நீரில் மூழ்கி பலி
/
கிருஷ்ணா கால்வாயில் குளித்த போலீஸ்காரர் நீரில் மூழ்கி பலி
கிருஷ்ணா கால்வாயில் குளித்த போலீஸ்காரர் நீரில் மூழ்கி பலி
கிருஷ்ணா கால்வாயில் குளித்த போலீஸ்காரர் நீரில் மூழ்கி பலி
ADDED : ஏப் 10, 2025 11:38 PM

ஆவடி, ஆவடி கோவில்பதாகை, சாமி நகரைச் சேர்ந்தவர் சம்பத், 44; கோயம்பேடு காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ராஜகுமாரி, 44. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
சம்பத் கடந்த 4ம் தேதி முதல் விடுப்பு எடுத்து, நண்பர்களுடன் மது அருந்தி ஊர் சுற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை 11:00 மணியளவில், ஆவடி, கோவில்பதாகையைச் சேர்ந்த நண்பர் பிரபா, 44, என்பவருடன், மது போதையில், கிறிஸ்ட் காலனி அருகே, கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றார்.
பிரபா கரையில் இருந்த நிலையில், சம்பத் கால்வாயில் இறங்கி குளித்துள்ளார். வெகு நேரமாகியும் சம்பத் வெளியே வரவில்லை. பயந்து போன பிரபா, யாருக்கும் சொல்லாமல் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்ற கணவரை காணாததால், அவரது மனைவி, போலீசில் புகார் அளித்தார். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், இரவு முழுதும் கால்வாயில் தேடியும் சம்பத் கிடைக்கவில்லை.
நேற்று காலை, ஆரிக்கம்பேடு சந்திப்பு அருகே, கிருஷ்ணா கால்வாயில், சம்பத் சடலம் மிதந்தது. போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

