/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வட்டி கும்பலால் தாக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ., பலி அதிர்ச்சி சட்டம் - ஒழுங்கை சாடும் அரசியல் தலைவர்கள்
/
வட்டி கும்பலால் தாக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ., பலி அதிர்ச்சி சட்டம் - ஒழுங்கை சாடும் அரசியல் தலைவர்கள்
வட்டி கும்பலால் தாக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ., பலி அதிர்ச்சி சட்டம் - ஒழுங்கை சாடும் அரசியல் தலைவர்கள்
வட்டி கும்பலால் தாக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ., பலி அதிர்ச்சி சட்டம் - ஒழுங்கை சாடும் அரசியல் தலைவர்கள்
ADDED : ஜூலை 26, 2025 11:45 PM

சென்னை : சென்னையில் வட்டி கும்பலுடன் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட சிறப்பு எஸ்.ஐ., ராஜாராமன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் மீதே பயம் இல்லாமல் அடித்து கொலை செய்யப்படும்போது, பொதுமக்களின் நிலை எப்படி இருக்கும் என்றும், சட்டம் - ஒழுங்கு நிலை குறித்தும் அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆவடி அடுத்த அண்ணனுார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராமன், 54. சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படையில் சிறப்பு எஸ்.ஐ.,யான இவர், அயல் பணியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், கைதிகள் வார்டில் பணியாற்றி வந்தார்.
கடந்த, 18ம் தேதி, எழும்பூர் 'பிரின்ஸ் பிளாசா' வளாகம் வெளியே, ஆட்டோவில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு அறிமுகமான நீலாங்கரையைச் சேர்ந்த ராகேஷ், 30, என்பவர், தான் நடத்தும், 'பைனான்ஸ்' நிறுவனம் வாயிலாக, அங்கு சிலருக்குக் கொடுத்த பணத்தை வசூல் செய்வதற்காக, கண்ணகி நகரைச் சேர்ந்த சரத்குமார், 36, என்பவருடன் வந்திருந்தார்.
இதை பார்த்து கொண்டிருந்த ராஜாராமன், அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்து சென்றார். பணத்தை வசூல் செய்து திரும்பிய ராகேஷிடம், 'நான் கடனாக பணம் கேட்டால் இல்லை எனக்கூறி விட்டு, மற்ற எல்லாருக்கும் பணத்தை தருகிறாயா?' என, கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
வாய் தகராறாக கைகலப்பாக மாறியது. முதலில், ராகேைஷ சிறப்பு எஸ்.ஐ., ராஜாராமன் தாக்கினார். இதில், ராகேஷிற்கு மூக்கில் காயம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ராகேஷ் மற்றும் அவரது நண்பர் சரத்குமார் சேர்ந்து, சிறப்பு எஸ்.ஐ., ராஜராமனை தாக்கினர். தொடர்ச்சியான தாக்குதலால் ராஜாராமன் கீழே விழுந்துள்ளார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், அப்பல்லோ மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையே, ராஜாராமனின் மனைவி கோகிலாம்பாள், எழும்பூர் போலீசில் கொடுத்த புகாரில், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை தேடும் பணியை போலீசார் துவக்கினர்.
பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், பெங்களூரு மத்திகரை பகுதியில், நேற்று முன்தினம் இரவு ராகேஷ், சரத்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வளசரவாக்கத்தைச் சேர்ந்த நவோதித், 26, என்பவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜாராமன், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால், இருவர் மீதான கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.
உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ., உடல், பிரேத பரிசோதனைக்கு பின், அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது இறுதி சடங்கிற்கு, போலீஸ் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், 1.50 லட்சம் ரூபாய் வழங்கினார்.
சிறப்பு எஸ்.ஐ.,யை வட்டி கும்பல் தாக்கி கொலை செய்தது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போலீஸ் மீதே பயம் இல்லாமல் அடித்து கொலை செய்யப்படும்போது, பொதுமக்களின் நிலை எப்படி இருக்கும் எனவும், சட்டம் - ஒழுங்கு நிலை குறித்தும் பல்வேறு சந்தேகங்களை அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பட்டப்பகலில் வீடுகளில், மக்கள் அதிகமாக நடக்கும் இடங்களில், காவல் நிலையம் அருகே சர்வசாதாரணமாக நடக்கும் அடுத்தடுத்த கொலை சம்பவங்கள், தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. எஸ்.எஸ்.ஐ., மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். - தினகரன் பொது செயலர், அ.ம.மு.க.,
கடந்த 18ம் தேதி நள்ளிரவில், மர்ம நபர்களால் எஸ்.ஐ., தாக்கப்பட்டதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புனைவு எப்.ஐ.ஆர்.,க்கு பெயர்போன தி.மு.க., அரசு, அஜித்குமார் வழக்கு போலவே, இந்த வழக்கிற்கு என்ன கதை எழுதியுள்ளது என தெரியவில்லை. ஒரு எஸ். எஸ்.ஐ., தாக்குதலுக்கு ஆளாகி, உயிரிழந்துள்ளது தி.மு.க., ஆட்சி காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு, சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதை மீண்டும் மெய்ப்பிக்கிறது. போலீசார் தாக்கப்படுவது, ராஜினாமா செய்வது, காவல் துறை சீர்கேடுகள் குறித்து பொது வெளியிலேயே தெரிவிப்பது என, தொடர்ந்து வரும் செய்திகள் உணர்த்துவது ஒன்றை தான். காவல் துறையை நிர்வகிக்க வக்கற்ற முதல்வராக இருக்கிறார் பொம்மை முதல்வர். எஸ்.எஸ்.ஐ., கொலை வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். - பழனிசாமி பொது செயலர், அ.தி.மு.க.,
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் என, யாருக்குமே பாதுகாப்பில்லாத கையாலாகாத ஆட்சி நடக்கிறது. எஸ்.எஸ்.ஐ., மரணத்தில் தொடர்புடைய அனைவரும், உடனே கைது செய்யப்பட வேண்டும். தன் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறைக்கே பாதுகாப்பில்லாத நிலையில் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தி.மு.க., ஆட்சி நடத்துவதே, சமூக விரோதிகளுக்கு தான். நான்கு ஆண்டு ஆட்சியில், தமிழகத்தை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றிருப்பது தான் தி.மு.க.,வின் சாதனை. இதற்கு என்ன விளக்கம் அளிக்க போகிறார். - அண்ணாமலை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்