கும்மிடிப்பூண்டி தடத்தில் தினமும் பயணியருக்கு திண்டாட்டம்! தொழில்நுட்ப கோளாறால் முடங்கும் ரயில் சேவை
கும்மிடிப்பூண்டி தடத்தில் தினமும் பயணியருக்கு திண்டாட்டம்! தொழில்நுட்ப கோளாறால் முடங்கும் ரயில் சேவை
UPDATED : ஜூலை 22, 2026 06:09 AM
ADDED : ஜூலை 21, 2026 09:31 PM

சென்னை: சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில், தினமும் 45 நிமிடங்கள் வரை ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதோடு, தொழில்நுட்ப குளறுபடியால், பல மணி நேரம் சேவை முடக்கப்பட்டு வருவதால், பயணியர் திண்டாடி வருகின்றனர். தொடரும் சிக்கலுக்கு தீர்வு காண சிறப்பு கவனம் செலுத்தப்படவில்லை என. பயணியர் குற்றம் சாட்டி வரும் நிலையில், நிலைமை சீராக இரண்டு ஆண்டுகளாகும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகரில் இயக்கப்படும், 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களில், ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு ரயில்வே சேவை உள்ளது வரவேற்கத்தக்கது தான்.
ஆனால், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் மட்டும், தினம் தினம் சேவை குறைபாடு, தாமதமாக ரயில்கள் இயக்கம், தொழில்நுட்ப கோளாறால் ரயில் சேவை பல மணி நேரம் முடக்கம் என, பயணியர் தினமும் திண்டாடி வருகின்றனர்.
காரணம் என்ன? சென்னையில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம் வழித்தடங்களில், மின்சார ரயில்கள் இயக்க, பிரத்யேக ரயில் பாதைகள் உள்ளன.
செங்கல்பட்டு வரை மூன்றும், அரக்கோணம் வரை நான்கு ரயில் பாதைகளும் இருப்பதால், விரைவு மற்றும் மின்சார ரயில்கள், பெரிய அளவில் தாமதமின்றி இயக்கப்படுகின்றன.
ஆனால், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில், இரண்டு ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. இந்த வழியாக மின்சாரம், விரைவு, சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விரைவு, சரக்கு ரயில்கள் செல்லும் போதெல்லாம், மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன.
இதனால், இத்தடத்தில் செல்லும் மின்சார ரயில்கள், தினமும் 45 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதால், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
சென்னையின் மற்ற வழித்தடங்களில், 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், ரயில்கள் பெரிய அளவில் தாமதமின்றி இயக்கப்படுகின்றன.
மேலும், அலுவலக நேரங்களில், அதிகபட்சமாக 10 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், கும்மிடிப்பூண்டி தடத்தில் மின்சார ரயில்கள் சீராக இயக்கப்படுவதில்லை.
விரைவு ரயில்கள் செல்லும் போதெல்லாம், மின்சார ரயில்கள் பேசின்பிரிட்ஜ், திருவொற்றியூர், மீஞ்சூர், எண்ணுார் ஆகிய ரயில் நிலையங்களில், திடீரென நிறுத்தப்படுகின்றன.
எண்ணுார் - அத்திப்பட்டு இடையே சிக்னல் கோளாறு, மின் கம்பி அறுந்து விழுவது, மின்சார ரயில் இன்ஜினில் மின் விநியோக கருவி பழுது போன்ற கோளாறுகள் அடிக்கடி ஏற்படுகின்றன.
இந்த மாதத்தில் மட்டும் ஏழு முறைகளுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால், ரயில் சேவை ஒரு மணி நேரத்திற்கு மேல் முடங்கின. தினமும், 45 நிமிடங்கள் வரை ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது என்பது வேறு கதை.
எனவே, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில், மின்சார ரயில்களை சீராக இயக்கவும், தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யவும், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, தமிழ்நாடு ரயில்வே பணியாளர் சங்க உதவி தலைவர் இளங்கோவன் கூறியதாவது:
மற்ற வழித்தடங்களில் கூடுதல் பாதைகள் இருப்பது போல், கும்மிடிப்பூண்டி தடத்தில் இல்லை. இரண்டு ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன.
சென்னை சென்ட்ரல் - அத்திப்பட்டு வரை, 22 கி.மீ.,க்கு மொத்தம் நான்கு பாதைகள் உள்ளன. இந்த பாதைகளும், அனல் மின் நிலையங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டன. இந்த ரயில் பாதைகளை, கும்மிடிப்பூண்டி வரை நீட்டித்தால் மட்டுமே, ரயில்களை தாமதமின்றி இயக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில், அத்திப்பட்டு வரை, மொத்தம் நான்கு பாதைகள் மட்டுமே உள்ளன. இதனால், வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வரும் விரைவு மற்றும் மின்சார ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
மேலும், பயணியர் நெரிசல், சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளதால், அத்திப்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை, 22 கி.மீ., துாரத்துக்கு மூன்றாவது, நான்காவது புதிய பாதை, 365.42 கோடி ரூபாயில் அமைக்க, ரயில்வே வாரியம் கடந்தாண்டு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்காக நிலத்தை கையகப்படுத்தி வருகிறோம்.
இந்த பணிகள் முடிந்தவுடன், கூடுதல் ரயில் பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். இரண்டு ஆண்டுகளுக்குள் பணிகளை முடித்து, மூன்றாவது, நான்காவது ரயில் பாதைகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். அதன்பின், மின்சார ரயில் இயக்கத்தில் தாமதம் ஏற்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
