/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4வது மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணி 'சீரியஸ்'
/
4வது மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணி 'சீரியஸ்'
ADDED : ஜூன் 18, 2025 11:52 PM
வடபழனி, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 25. இவரது மனைவி சரஸ்வதி, 23. இவர்களுக்கு திருமணமாகி, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக குடும்பத்துடன் வடபழனி, அழகிரி நகர், பாலாஜி அவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சுரேஷ் மனைவி, குழந்தையுடன் துாக்கி கொண்டிருந்தபோது, திடீரென அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து ஒருவர், அலறல் சத்தத்துடன் விழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து பார்த்தார்.
அப்போது, அவரது மனைவி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
இது குறித்து வடபழனி போலீசார் விசாரித்தனர். இதில், சரஸ்வதி கடந்த சில வாரங்களாக மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்து வந்ததாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், துாங்கி கொண்டிருந்தவர் திடீரென அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்ததில் காயமடைந்திருப்பது தெரியவந்தது.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.