ADDED : நவ 03, 2025 01:34 AM

திருவொற்றியூர்:  திறந்தவெளி கால்வாயை சீரமைக்காத அதிகாரிகளால், வெள்ளப் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் உட்பட ஏழு மண்டலங்களில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியான, 3,220 கோடி ரூபாய் செலவில், கொசஸ்தலை வடிநிலத் திட்டத்தின் கீழ், பல தொகுப்புகளாக, மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்திலும், தெரு, அங்கும் தேங்கும் மழை அளவு பொருத்து, மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சமீபத்திய தொடர் கனமழையின் போது, எங்கும் மழைநீர் தேக்கம் இல்லை.
இதில், திருவொற்றியூர் மண்டலம், ஆறாவது வார்டில், மணலி விரைவு சாலையையொட்டி, மதுரா நகர் துவங்கி, கலைஞர் நகர் பிரதான சாலை வரை மட்டும், வாய்க்காலுக்கு மாற்றாக மூடு வடிகால் அமைக்கப்படவில்லை.
விடுப்பட்ட, இந்த, 500 அடி துார மழைநீர் வடிகால் பணியால், நிச்சயம் வெள்ளப்பாதிப்பு ஏற்படும் என, ஏற்கனவே நம் நாளிதழில் செய்தி வெளியானது. ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விளைவு சமீபத்திய மழையின்போது, மழைநீர் செல்வதில் இந்த இடத்தில் சிக்கல் ஏற்பட்டது. நீதிமன்ற வழக்குகளை சுட்டிக்காட்டி, அதிகாரிகள் இங்கு வடிகால் அமைக்க முடியாது எனக்கூறி வருகின்றனர்.
அது ஒருபுறமிருந்தாலும், இருக்கும் வாய்க்காலையாவது, முழுதும் துார்வார வேண்டும். யாரும் விழுந்து விடாதபடி, மேல் பக்கத்தை மூடி வைக்க வேண்டும். இல்லாவிடில், நவ., - டிச., மாத மழைக்கு, இந்த வாய்க்காலால், வெள்ளப்பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என, பலரும் எச்சரிக்கின்றனர்.

