/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஆர்.எப்., ஆலையில் உற்பத்தி முடக்கம் ரூ.25 கோடி பாதிப்பு; தொடருது போராட்டம்
/
எம்.ஆர்.எப்., ஆலையில் உற்பத்தி முடக்கம் ரூ.25 கோடி பாதிப்பு; தொடருது போராட்டம்
எம்.ஆர்.எப்., ஆலையில் உற்பத்தி முடக்கம் ரூ.25 கோடி பாதிப்பு; தொடருது போராட்டம்
எம்.ஆர்.எப்., ஆலையில் உற்பத்தி முடக்கம் ரூ.25 கோடி பாதிப்பு; தொடருது போராட்டம்
ADDED : செப் 23, 2025 01:29 AM

திருவொற்றியூர்:தொழிலாளர்கள் போராட்டம் 11 நாளாக தொடர்வதால், எம்.ஆர்.எப்., தொழிற்சாலையில், உற்பத்தி முடங்கி, 25 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சென்னை, திருவொற்றியூர் விம்கோ நகரில், எம்.ஆர்.எப்., டயர் உற்பத்தி தொழிற்சாலை செயல்படுகிறது.
இங்கு, 61 பயிற்சியாளர்கள் உட்பட, 820 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு, தினசரி, 3,000 - 3,500 கனரக வாகனங்களுக்கான டயர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
ஆண்டுதோறும், ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டிற்கு நிர்வாகம் சார்பில், முன்பணம் வழங்கப்பட்டு, பின், ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.
இம்முறை, தொழிலாளர்கள் இணக்கமான சூழலை கடைபிடிக்கவில்லை எனக் கூறி, எம்.ஆர்.எப்., நிர்வாகம் முன்பணம் தர மறுத்துவிட்டது.
இதைக்கண்டித்து, செப்., 11 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து, கேன்டீன் உணவு உள்ளிட்ட வசதிகளை நிறுத்தியது.
தொழிற்சாலை முன் போராட்டம் நடத்தவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றதால், தொழிலாளர்கள் விம்கோ நகர் - சி.ஐ.டி.யு., அலுவலகம் முன்பாக, போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை சார்பில், சமரச பேச்சு நேற்று துவங்கியது.
இன்றும் பேச்சு நடத்தப்பட உள்ளது. இதில், தீர்வு எட்டப்படும் என, தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இழப்பு தொழிலாளர் போராட்டம் தொடரும் நிலையில், பயிற்சி தொழிலாளர்கள் உட்பட 90 பேர் மட்டுமே ஆலையில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
நாளொன்றுக்கு, 3,000 - 3,500 கனரக டயர்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், 500க்கும் குறைவான டயர்களே உற்பத்தியாவதாகவும், இதன் மூலம், 10 நாட்களில், 25 கோடி ரூபாய் நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தொழிற்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
எம்.ஆர்.எப்., நிறுவனத்தில் பயிற்சியாளராக பணியில் சேரும் தொழிலாளர்களை, சட்டப்படி இரண்டு ஆண்டுகளுக்குள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால் விதிமுறைக்கு மாறாக, ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சி நிலையிலேயே வைத்து, தமிழக இளைஞர்களின் உழைப்பு சுரண்டப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கான குழு மருத்துவ காப்பீட்டுக்கு, நிர்வாகம் பணம் தராமல் ஆண்டுகளாக தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்வது கொடுமை.
தொழிலாளர்கள், தொழிலாளர் நலத்துறையில் பலமுறை மனு அளித்தும் தி.மு.க., அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது கொடுமையின் உச்சம். இனியாவது, அந்நிறுவனத்திடம் பேசி, தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.
- சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.