/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி பேருந்து நிலையம் கட்டுவதில் சிக்கல் நீடிப்பு 6 ஏக்கர் இடத்தை கைமாற்றினால் திட்டம் சாத்தியம்
/
வேளச்சேரி பேருந்து நிலையம் கட்டுவதில் சிக்கல் நீடிப்பு 6 ஏக்கர் இடத்தை கைமாற்றினால் திட்டம் சாத்தியம்
வேளச்சேரி பேருந்து நிலையம் கட்டுவதில் சிக்கல் நீடிப்பு 6 ஏக்கர் இடத்தை கைமாற்றினால் திட்டம் சாத்தியம்
வேளச்சேரி பேருந்து நிலையம் கட்டுவதில் சிக்கல் நீடிப்பு 6 ஏக்கர் இடத்தை கைமாற்றினால் திட்டம் சாத்தியம்
ADDED : செப் 19, 2024 12:51 AM

படம் காளீஸ்வரன்
சென்னை, சென்னையின் முக்கிய பகுதியாக வேளச்சேரி உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள், மால்கள் என, அபார வளர்ச்சி அடைந்து வருகிறது.
இங்கு, 2007ல், கடற்கரை - வேளச்சேரி மேம்பால ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது. வேளச்சேரி --- பரங்கிமலை ரயில் நிலைத்தை இணைக்கும் பணி, ஓரிரு மாதத்தில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது செயல்பாட்டிற்கு வரும் போது, தாம்பரத்தில் இருந்து நேரடியாக, மின்சார ரயிலில் பயணிக்க முடியும்.
அதேபோல், வேளச்சேரியில் இருந்து, 3 கி.மீ., துாரத்தில் ஓ.எம்.ஆரிலும் மற்றும் 1 கி.மீ., துாரத்தில் வாணுவம்பேட்டையிலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.
வேளச்சேரியில் இருந்து, தாம்பரம், சோழிங்கநல்லுார், அடையாறு, மீனம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு துரிதமாக செல்ல, 100 மற்றும் 200 அடி அகல சாலைகள் உள்ளன.
இதனால், மின்சார ரயில், மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளின் முக்கிய வழித்தடமாக, வேளச்சேரி அமையும். மேம்பால ரயில் நிலையத்தை ஒட்டி, பணிமனையுடன் கூடிய பேருந்து நிலையம் கட்ட, 2010ம் ஆண்டு, 6 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது.
வேளச்சேரியில், மோனோ ரயில் திட்டம் துவக்க திட்டமிடப்பட்டு, பேருந்து நிலையம் கட்டும் திட்டத்தை கைவிடுவதாக, 2013ல் சி.எம்.டி.ஏ., அறிவித்தது. அதன் பின், மோனோ ரயில் திட்டமும் கைவிடப்பட்டது.
வேளச்சேரி ரயில் நிலைய வடக்கு திசையில் உள்ள காலி இடம், பொழுதுபோக்கு மையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதற்கு ஒதுக்கிய இடம் போக, இன்னும் காலி இடம் உள்ளது. அதில், 2 ஏக்கரில் பேருந்து நிலையம் அமைத்து, அதற்கு ஈடாக 6 ஏக்கர் இடத்தை ரயில்வேக்கு வழங்கலாம்.
அதேபோல், வேளச்சேரி - தரமணி 200 அடி அகல சாலையில், ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான, 1.85 ஏக்கர் இடம் உள்ளது. அதில், தனியார் பேருந்துகள் நிறுத்தி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த இடத்தில், பேருந்து நிலையம் கட்டி, அதற்கு ஈடாக 6 ஏக்கரில் மாற்று இடம் வழங்கலாம். வேளச்சேரியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பேருந்து நிலையம் கட்ட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
இந்நிலையில், வேளச்சேரி பேருந்து நிலையம் கட்ட ஒதுக்கப்பட்ட 6 ஏக்கர் இடம், இரண்டு ஆண்டுக்கு முன், சென்னை மாநகர போக்குவரத்து வசம் ஒப்படைக்கப்பட்டது.
இங்கு, பணிமனையுடன் கூடிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்த இடத்தை ஒட்டி சதுப்பு நிலம் உள்ளதால், பேருந்து நிலையம் அமைப்பது குறித்து ஆய்வு செய்கிறோம். இடம் கைமாற்றி கொடுத்து, ரயில்வே இடத்தில் பேருந்து நிலையம் அமைத்தால், அனைத்து வகையிலும் வசதியாக இருக்கும். உயர் அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.