/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விதிகளை மீறி செயல்படும் ஆலைக்கு எதிர்ப்பு சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக குற்றச்சாட்டு
/
விதிகளை மீறி செயல்படும் ஆலைக்கு எதிர்ப்பு சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக குற்றச்சாட்டு
விதிகளை மீறி செயல்படும் ஆலைக்கு எதிர்ப்பு சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக குற்றச்சாட்டு
விதிகளை மீறி செயல்படும் ஆலைக்கு எதிர்ப்பு சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக குற்றச்சாட்டு
ADDED : நவ 12, 2025 12:27 AM

கோவிலம்பாக்கம்: கோவிலம்பாக்கம் ஊராட்சியில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள, 'ரெடிமிக்ஸ் கான்கிரீட்' ஆலைக்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம், கோவிலம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை ஒட்டி, 'ரெடிமிக்ஸ் கான்கிரீட்' ஆலை அமைந்துள்ளது.
இது குறித்து, குடியிருப்பு நலச்சங்கத்தினர் கூறியதாவது:
ஆலை அமைக்க துவங்கும் முன்பே, அதை சுற்றியுள்ள பாக்யலட்சுமி, காகிதபுரம், ராஜா, கிருஷ்ணா நகர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2023ல் அளித்த புகாரின்படி, ஆலை துவக்கப்பணியை நிறுத்த, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.
ஆனால், அந்நிறுவனம் பணியை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வந்ததை எதிர்த்து போராட்டம் நடத்தியதோடு, மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்தோம். ஆனாலும், அந்நிறுவனம் எதையும் மதிக்காமல் பணியை நிறைவு செய்து, கடந்த இரு ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இதனால், இந்த ஆலையை சுற்றி வாழும், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சிமென்ட் துாசு அனைத்து வீடுகளிலும் படிவதால், ஜன்னல் கதவுகளை கூட திறந்து வைக்க முடியாத நிலை உள்ளது.
சிமென்ட் துாசுக்களால் ஏற்படும் அலர்ஜியால், பலர் ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். தவிர, இந்த ஆலைக்கு வந்து செல்லும் கனரக வாகனங்களால், ரேடியல் சாலையின் அணுகு சாலை சேதமடைந்துள்ளது.
குடியிருப்புகளுக்கு, 200 மீட்டருக்கு வெளியே தான், இதுபோன்ற ஆலைகள் அமைக்க வேண்டும் என, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலை மதிக்காமல், இந்த ஆலை இயங்கி வருகிறது.
இதுகுறித்து, கலெக்டர் அலுவலகம், முதல்வர் தனிப்பிரிவு, எம்.எல்.ஏ., என, அனைவருக்கும் புகார் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆளும் கட்சியினரின் ஆதரவோடு இயங்கும் இந்த ஆலையை அகற்றி, மக்களின் நலனை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

