/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிராட்வேயில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மறியலில் ஈடுபட்டோரால் சலசலப்பு
/
பிராட்வேயில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மறியலில் ஈடுபட்டோரால் சலசலப்பு
பிராட்வேயில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மறியலில் ஈடுபட்டோரால் சலசலப்பு
பிராட்வேயில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மறியலில் ஈடுபட்டோரால் சலசலப்பு
ADDED : டிச 31, 2025 05:16 AM

பிராட்வே: பிராட்வே, என்.எஸ்.சி., போஸ் சாலையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் உள்ளிட்ட, 250க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பிராட்வே, என்.எஸ்.சி., போஸ் சாலை 40 அடி அகலமுடையது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இச்சாலையில், 20 அடிக்கு பழம், பூ, உள்ளிட்ட சிறு கடைகள் ஆக்கிரமித்திருந்தன.
இதனால், சாலை மேலும் குறுகி, நடந்து செல்லக்கூட முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்பட்டது.
மக்கள் நலனை கருத்தில் வைத்து, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களிடம் கடைகளை அகற்றும்படி, 10 நாட்களுக்கு முன் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினமும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.
இந்நிலையில், நேற்று 200க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன், 250க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை 'பாப் காட், பொக்லைன்' உள்ளிட்ட இயந்திரங்களால் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள், பூக்கடை போலீசார், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர். ''இப்பகுதியில் மீண்டும் கடைகள் வைக்கக்கூடாது; பூங்கா நகர், டி.என்.பி.எஸ்.சி. சாலையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது'' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சை மறித்தும், போராட்டம் நடத்தினர்.
அவர்களை போலீசார் கைது செய்து, பேருந்தில் ஏற்ற முயன்றபோது ஏற மறுத்தனர். பின், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

