/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருத்தணியில் 4 இடங்களில் மறியல் தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல்
/
திருத்தணியில் 4 இடங்களில் மறியல் தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல்
திருத்தணியில் 4 இடங்களில் மறியல் தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல்
திருத்தணியில் 4 இடங்களில் மறியல் தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல்
ADDED : ஜன 04, 2025 12:37 AM

திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியுடன் கார்த்திகேயபுரம் மற்றும் பட்டாபிராமபுரம் ஆகிய இரு ஊராட்சிகளை இணைப்பதற்கு, அரசாணை வெளியானது.
நகராட்சியுடன் இணைவதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வந்த இரண்டு ஊராட்சிகளை சேர்ந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் நேற்று காலை திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலை, திருத்தணி புதிய புறவழிச்சாலை மற்றும் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலை என மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் சாலை மறியல் மற்றும் போராட்டம் நடத்தினர்.
இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், திருத்தணி டி.எஸ்.பி. கந்தன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரசம் பேசி, அப்புறப்படுத்தினர்.
இதே போல் பட்டாபிராமபுரம் ஊராட்சியை சேர்ந்த 20 ஆண்களுடன், 300க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது, 20 ஆண்களை போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் பெண்கள் வாக்குவாதம் செய்தனர்.
திடீரென பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்ததால், அவர்களை பெண் போலீசார் வலுக்கட்டயமாக அப்புறப்படுத்தினர். இதில் பெண் ஒருவருக்கு கையில் ரத்தகாயம் ஏற்பட்டது.
தொடர்ந்து திருத்தணி தாசில்தார் மலர்வழி, துணை தாசில்தார் தேவராஜ், வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார் ஆகியோர் சமாதான பேச்சு நடத்தினர். 'கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள்; கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்' என, சமரசப்படுத்தினர்.
நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின், கலைந்து சென்றனர்.