ADDED : செப் 23, 2024 06:16 AM

குன்றத்துார்: குன்றத்துார் அருகே, சிக்கராயபுரத்தில் 23 கல்குவாரி குட்டைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 300 முதல் 400 அடி ஆழம் உடையவை.
இந்த குவாரி நடுவே உள்ள பாதை, குன்றத்துார் - பூந்தமல்லி நெடுஞ்சாலையையும், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையையும் இணைக்கும் வகையில் உள்ளது. இதனால், இந்த வழியே இருசக்கர வாகனம், ஆட்டோ, மினி வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் சென்று வந்தன.
இந்த பாதையில் இருபுறமும் தடுப்புகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் தடுமாறினால் 300 அடி ஆழ பள்ளத்தில் விழும் ஆபத்து இருப்பதாக, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாதப்படி, சாலை குறுக்கே கல் தடுப்புகள் வைத்து மூடப்பட்டன. இருசக்கர வாகனம் செல்லும் அளவுக்கு வழி உள்ளதால், இந்த வழியை இருசக்கர வாகனங்கள், தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கல்குவாரி பாதையில் ஓரிடத்தில் மண் சரிவு ஏற்பட்டு, சாலை குறுகலாகிவிட்டது. மேலும், வாகனங்கள் செல்லும்போது மண் சரிவு ஏற்படும் ஆபத்தும் உள்ளது.
இதை அறியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்கின்றனர். அசம்பாவிதங்கள் நிகழும் முன், இந்த சாலை மூட, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.