/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஸ் கோர்ஸ் சாலை 100 அடியாக மாறுது சுற்றுச்சுவரை இடித்து சாலை விரிவாக்கம்
/
ரேஸ் கோர்ஸ் சாலை 100 அடியாக மாறுது சுற்றுச்சுவரை இடித்து சாலை விரிவாக்கம்
ரேஸ் கோர்ஸ் சாலை 100 அடியாக மாறுது சுற்றுச்சுவரை இடித்து சாலை விரிவாக்கம்
ரேஸ் கோர்ஸ் சாலை 100 அடியாக மாறுது சுற்றுச்சுவரை இடித்து சாலை விரிவாக்கம்
ADDED : நவ 10, 2025 01:36 AM

சென்னை: நெரிசலால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, கிண்டி ரோஸ் கோர்ஸ் சாலை, 100 அடி அகலத்தில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக ரேஸ் கோர்ஸ் சுற்றுச்சுவரை இடித்து, நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
சென்னையின் முக்கிய வழித்தடமாக கிண்டி உள்ளது. மின்சார ரயில், மெட்ரோ ரயில், ரேஸ் கோர்ஸ் மற்றும் சிட்கோ பேருந்து நிலையங்கள் என, பயணியர் எளிதில் பயணிக்கும் வகையில் கிண்டி அமைந்துள்ளது.
அண்ணா சாலை, அடையாறு பகுதியில் இருந்து தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு நோக்கி செல்லும் பேருந்துகள், கிண்டி ரயில் நிலையம் - அண்ணா சாலை சந்திப்பு வழியாக சென்றன.
கடந்த 2013ம் ஆண்டு, மெட்ரோ ரயில் பணியால், மாநகர பேருந்துகள், ரேஸ் கோர்ஸ் வழியாக திருப்பி விடப்பட்டன. அதன்பின், நிரந்தர வழித்தடமாக மாறியது.
கடந்த 2015ம் ஆண்டு, 38 அடி அகலமாக இருந்த ரேஸ் கோர்ஸ் பஸ் நிறுத்த சாலையை, 2.10 கோடி ரூபாயில், 60 அடி அகலமாக மாற்றி அமைக்கப்பட்டது.
இருப்பினும், ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதை பாதுகாப்பாக இல்லாததால், வாகன நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி பயணியர் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
இந்நிலையில், பேருந்தில் வரும் பயணியர், ரயில் நிலையத்திற்கு நடைமேம்பாலம் வழியாக செல்லவும், பேருந்து நிலையம் பகுதியை, 900 மீட்டர் நீளத்தில், 100 அடி அகலமாக மாற்றவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக, 20.75 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணி நடக்கிறது.
ரேஸ் கோர்ஸ் பேருந்து நிலையத்தில், தெற்கு திசை நோக்கி செல்லும் சாலை வளைவாகவும், குறுகலாகவும் உள்ளது. இதனால், அந்த இடத்தில், 250 மீட்டர் நீளத்தில், அரசு கட்டுப்பாட்டில் உள்ள ரேஸ் கோர்ஸ் வளாக சுற்றுச்சுவரை இடித்து, சாலை அகலப்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, 2,500 சதுர மீட்டர் நிலத்தை அரசு கையகப்படுத்த உள்ளது. சாலை விரிவாக்கத்திற்கு, 6.84 கோடி ரூபாய் மாநகராட்சி ஒதுக்கி உள்ளது.
இந்த நிதியில் ரேஸ் கோர்ஸ் சுற்றுச்சுவரை இடித்து, சாலையை விரிவாக்கம் செய்த பின், மீண்டும் சுற்றுச்சுவரை கட்டுவது, இடையூறாக உள்ள மின்மாற்றியை மாற்றி அமைப்பது, தார்ச்சாலை மற்றும் மைய தடுப்பு அமைப்பது போன்ற பணிகள் செய்யப்படும்.
இதன் வாயிலாக, சாலை 100 அடி அகல சாலையாக மாறுவதால், நெரிசல் குறையும் என அதிகாரிகள் கூறினர்.

