ADDED : ஜன 24, 2025 12:14 AM

சென்னை, -- -
'இந்திய கதிரியக்க மற்றும் இமேஜிங் சங்கத்தின், 77வது ஆசிய காங்கிரஸ் மூன்று நாள் மாநாடு, சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.
மாநாட்டை துவக்கி வைத்த அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
ஆரம்ப கட்டத்தில் நோய் கண்டறிதல் முதல், சிகிச்சைக்கு வழிகாட்டி, நோயாளியின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பது வரை, கதிரியக்கவியல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மாநாட்டின் சிறப்பம்சமாக, கண்காட்சியில், 700 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், 44 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாடு பலருக்கும் புதிய தொழில்நுட்பத்தை அறியும் வாய்ப்பை தருகிறது.
'குணப்படுத்துவதை விட தடுப்பு சிறந்தது' என்பது மருத்துவ வரலாற்றில் உள்ள பொன்னான வார்த்தைகள். மேம்பட்ட வசதிகள் கிராமப்புற, ஏழை, எளிய மக்களுக்குச் சென்றடைவதில், தமிழக அரசு ஆர்வமாக உள்ளது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
விழாவில், இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:
வீடு தேடி மருத்துவம் போல, வீடு தேடி அறுவை சிகிச்சை திட்டத்தை தொடங்க இருக்கிறோம். வாகனங்களில் ரோபோடிக்ஸ் கருவிகளை கிராமங்களுக்கு அனுப்பி வைத்து, சிகிச்சை அளிக்கும் புதிய திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படும்.
இதை மத்திய, மாநில அரசுகளின் காப்பீடு திட்டத்தில் இணைக்க முயற்சித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.