/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி, வேளச்சேரி புதிய குளங்களில் கழிவுநீர் கலப்பின்றி தேங்கிய மழைநீர்
/
கிண்டி, வேளச்சேரி புதிய குளங்களில் கழிவுநீர் கலப்பின்றி தேங்கிய மழைநீர்
கிண்டி, வேளச்சேரி புதிய குளங்களில் கழிவுநீர் கலப்பின்றி தேங்கிய மழைநீர்
கிண்டி, வேளச்சேரி புதிய குளங்களில் கழிவுநீர் கலப்பின்றி தேங்கிய மழைநீர்
ADDED : டிச 04, 2024 12:28 AM

வேளச்சேரி, கிண்டி ரேஸ் கோர்ஸ் மற்றும் வேளச்சேரியில் புதிதாக அமைத்த ஏழு குளங்கள், வடிகால் இணைப்பு, கழிவுநீர் கலப்பு இல்லாமல், நேரடி மழைநீர் சேகரிப்பு குளங்களாக மாறியுள்ளன.
அடையாறு மண்டலம், 172வது வார்டு, கிண்டி ரேஸ்கோர்ஸ் வளாகம், 160 ஏக்கர் பரப்பு உடையது. இந்த இடம், 1945 முதல் குத்தகை அடிப்படையில் குதிரை பந்தயம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், 1970 முதல் வாடகை செலுத்தாமல் இருந்தது. இதனால், சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்ற தமிழக அரசு, குத்தகையை ரத்து செய்து, செப்டம்பரில் இடத்தை மீட்டது.
ரேஸ்கோர்ஸ் வளாகத்தில், மழைநீரை முறையாக கையாள போதிய கட்டமைப்பு அமைக்கவில்லை. இதனால், முந்தைய ஆண்டுகளில் பெய்த கனமழையில் வெள்ள நீர் தேங்கியது.
கடந்த ஆண்டு, ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் சேர்ந்த வெள்ள நீரை ஒரே நேரத்தில் மொத்தமாக வெளியேற்றியதால், ஐந்து பர்லாங் சாலையில் உள்ள கட்டுமான பள்ளத்தில் மண் சரிந்து, இரண்டு பேர் பலியாகினர்.
இந்நிலையில், மீட்கப்பட்ட இடத்தில் குளம் அமைத்து, மழை வெள்ளத்தை சேமிக்க மாநகராட்சி முடிவு செய்தது. ரேஸ்கோர்ஸ் வளாகத்தை நீர்நிலையாக மாற்ற வேண்டும் என, பசுமை தீர்ப்பாயமும் அறிவுறுத்தியது.
மொத்தம், 160 ஏக்கர் இடத்தில், 118 ஏக்கர் இடம் மைதானமாக உள்ளது. இதில், 1 ஏக்கர் பரப்பில், ஏற்கனவே ஒரு குளம் இருந்தது. இந்த குளத்தை மேம்படுத்தி, நவம்பரில் கூடுதலாக நான்கு குளங்கள் வெட்டப்பட்டன. தெற்கு திசையில், 8 அடி அகலத்தில் தடுப்பு அமைக்கப்பட்டது. குளங்கள் வெட்ட, 26 பொக்லைன்கள் பயன்படுத்தப்பட்டன.
மொத்தம், 6 ஏக்கர் பரப்பில், 50 லட்சம் கன அடி நீரை சேமிக்கும் வகையில், ஐந்து குளங்கள் உள்ளன. ஒவ்வொரு குளமும் 12 முதல் 18 அடி ஆழம் உடையவை.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 30ம் தேதி பெய்த மழையில், ரேஸ்கோர்ஸ் குளங்களில், 50 லட்சம் கன அடியும், வேளச்சேரியில் உள்ள இரண்டு குளங்களில், 15 லட்சம் கன அடியும் மழைநீர் சேமிக்கப்பட்டது.
குளங்கள் நிரம்பினால் வெளியேறும் வகையில், கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வடிகால் இணைப்பு, கழிவுநீர் கலக்காமல் நேரடியாக விழுந்த மழைநீரால், இக்குளங்கள் நிரம்பின. இக்குளங்களில் மீன்கள் விடப்பட்டுள்ளன.
சில நாட்களில் நன்னீராக மாறி, சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.