/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சொகுசு கார்களை திருடும் ராஜஸ்தான் வாலிபர் கைது
/
சொகுசு கார்களை திருடும் ராஜஸ்தான் வாலிபர் கைது
ADDED : செப் 04, 2025 02:50 AM
சென்னை, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், ஆடி மற்றும் பி.எம்.டபிள்யூ., உள்ளிட்ட சொகுசு கார்களை திருடி விற்று, உல்லாச வாழ்க்கை நடத்தி வந்த, ராஜஸ்தான் மாநில பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, அண்ணா நகர் கதிரவன் காலனியைச் சேர்ந்தவர் எத்திராஜ் ரத்தினம், 53. இவர், கோயம்பேடு பகுதியில் உள்ள சர்வீஸ் மையத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன் பார்ச்சுனர் காரை சர்வீஸ் செய்து முடித்து, வீட்டு வாசல் அருகே நிறுத்தி இருந்தார்.
ஜூன் 10ல் மர்ம நபர் ஒருவர், அதி நவீன கருவி வாயிலாக கார் கதவை திறந்து திருடிச் சென்றார்.
இதுகுறித்து, எத்திராஜ் ரத்தினம், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் காரை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர்.
புதுச்சேரியிலும், இதே பாணியில் சொகுசு காரை திருடிய வாலிபரை, அம்மாநில போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர், எத்திராஜ் ரத்தினம் உள்ளிட்டோரின் காரை திருடியதும் தெரியவந்தது.
தனிப்படை போலீசார் அந்த வாலிபரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி சட்டேந்திரசிங் ஷகாவாட், 43 என்பதும், அவரின் தந்தை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், ஆடி, பி.எம்.டபிள்யூ., உள்ளிட்ட சொகுசு கார்களை திருடி, ராஜஸ்தான், நேபாளத்தில் விற்று சொகுசு வாழ்க்கை நடத்தியதும் தெரியவந்தது.
இதுவரை, 100க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடி விற்றுள்ளார். எத்திராஜ் ரத்தினத்தின் பார்ச்சுனர் காரை, இந்தியா - பாக்., எல்லை அருகே, ராஜஸ்தான் பகுதியில் விற்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். அம்மாநில போலீசார் உதவியுடன் கார் மீட்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களில், அந்த கார், 40,000 கி.மீ., இயக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. மற்ற கார்களை பறிமுதல் செய்வது தொடர்பாக, கைதான வாலிபரிடம் விசாரணை நடக்கிறது.
***