/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆழ்ந்த பக்தியை தந்த ரசிகா முரளி
/
ஆழ்ந்த பக்தியை தந்த ரசிகா முரளி
ADDED : டிச 30, 2025 05:45 AM

திருமயிலை ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில், தியாகராஜரின் 'ஜய ஜய ஸ்ரீ ரகுராமா' என்ற கிருதியுடன், சிறப்பான முறையில் இசை கச்சேரியை துவங்கினார் ரசிகா முரளி.
மாணிக்கக் கல் பதித்த வீணையை கைகளில் ஏந்தி, சுந்தரேசருடன் அருள்பாலிக்கும், மீன் போன்ற கண்ணுடைய மீனாட்சி அம்மனை பற்றிய கிருதியான, வராளி ராக, 'மாமவ மீனாட்சி' எனும் முத்துசுவாமி தீட்ஷிதரின் படைப்பை சபையெங்கும் ஒலிக்கச் செய்தார். மிஸ்ரசாபு தாளத்தில் அமைந்த இந்த கிருதிக்கு, கச்சிதமாக மிருதங்கம் இசைத்தார் பிச்சை வினித்.
இனிமையாகவும், மனதை மயக்கும் தன்மையுடனும் இருக்கும், நளினகாந்தி ராகத்தில், ஜி.என்.பாலசுப்பிரமணியம் இயற்றிய, 'நீ பாதமே கதி' என்ற கிருதியை வழங்கினார். இது, தன் பாவங்களை நீக்கி நல்வாழ்வு தர வேண்டும் என்பதை குறிப்பதாகும்.
இதை பாடலில் ரசிகா முரளி வெளிப்படுத்தியதும், வயலினில் ஸ்ரீநாத் ஹரிஹரன் வாசித்ததும், சபையினரை உருகவைத்தது.
'தாமரை முகம் கொண்ட ராமா! துாய புத்தி உடைய தியாகராஜரால் போற்றப்படும் இறைவனே' என, தியாகராஜரால் இயற்றப்பட்ட, 'சரசிருஹனான ராமா' கிருதியை, ஆழ்ந்த பக்தியுடன் பாடினார்.
மார்கழி என்றாலே நம் நினைவிற்கு வருவது சூடி தந்த சுடர்கொடி ஆண்டாள் தான். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான இவர் இயற்றிய திருப்பாவைகளில் 'துாமணி மாடத்து' என்ற திருப்பாவையை, கச்சேரியின் முக்கிய உருப்படியாக எடுத்துக்கொண்டார்.
ஆதி தாளத்தில் அமையப்பெற்ற இக்கிருதிக்கு, பற்பல ஸ்வர பிரயோகங்களை பயன்படுத்தி, சபையினரை மயக்கினார்.
பின் கற்பனை ஸ்வரங்கள், சர்வலகு ஸ்வரங்கள், குறைப்பு ஸ்வரங்கள் மற்றும் ஸ்வர கோர்வையை பயன்படுத்தி மேலும் மெருகேற்றினார். தனி ஆவர்த்தனம் சபையை திருப்திப்படுத்தியது.
இறுதியாக, கேரளத்தில் மஹாராஜாவாக இருந்து இசைக்கு அதிக பலம் சேர்த்த, சுவாதி திருநாள் இயற்றிய 'விஸ்வேஷ்வர தர்சனா' என்ற படைப்பை பாடி, கச்சேரியை நிறைவு செய்தார்.
- ரா.பிரியங்கா

