/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எண்ணுார் விரைவு சாலையில் ரெடிமேட் வேகத்தடையால் அபாயம்
/
எண்ணுார் விரைவு சாலையில் ரெடிமேட் வேகத்தடையால் அபாயம்
எண்ணுார் விரைவு சாலையில் ரெடிமேட் வேகத்தடையால் அபாயம்
எண்ணுார் விரைவு சாலையில் ரெடிமேட் வேகத்தடையால் அபாயம்
ADDED : ஏப் 21, 2025 02:29 AM

திருவொற்றியூர்:சென்னை, எர்ணாவூர் - பாரதியார் நகர் சந்திப்பு முதல், திருவொற்றியூர் - சுங்கசாவடி வரையுள்ள, 3.5 கி.மீ., துாரம் நான்கு வழி சாலையான, எண்ணுார் விரைவு சாலையில், தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
சென்னை துறைமுகம் நோக்கி செல்லும், கன்டெய்னர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு இவ்வழியே பிரதானம். வடசென்னையை இணைக்கும் முக்கிய சாலையென்பதால், போக்குவரத்து மிகுதியாக இருக்கும். அடிக்கடி விபத்து ஏற்படும்.
காரணம், இந்த சாலையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில், சாலையை கடக்கும் விதமாக, இடைவெளி உள்ளது. வேகத்தடை ஏதுமில்லாததால், அதிவேகமாக செல்லும் வாகனங்களில், பாதசாரிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கதையாக இருந்தது.
எனவே, பாதசாரி கடக்கும் இடைவெளி அருகே, வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில், வேகத்தடை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதற்கு தீர்வாக, எண்ணுார் விரைவு சாலையின், கே.வி.கே., குப்பம், அப்பர் சாமி கோவில் தெரு, பட்டினத்தார் கோவில் சந்திப்பு, எல்லையம்மன் கோவில் சந்திப்பு, சுங்கசாவடி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில், திடீரென ரெடிமேட் வேகத்தடை பொருத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் கனரக வாகனங்களின் வேகம் குறையவில்லை. மாறாக, இரு சக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோ, கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ரெடிமேட் வேகதத்தடைகளை கடக்கும், போது அதிரும் வாகனங்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக, வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ரெடிமேட் வேகத்தடையை அகற்றி விட்டு, தார்சாலையான வேகத்தடை அல்லது, கனரக வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில், இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

