/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்புகள் அவசியம்'
/
'பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்புகள் அவசியம்'
'பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்புகள் அவசியம்'
'பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்புகள் அவசியம்'
UPDATED : ஜூலை 27, 2024 11:03 AM
ADDED : ஜூலை 27, 2024 10:57 AM

சென்னை: ''மாணவர்களை பண்படுத்த மீண்டும் நீதி போதனை வகுப்புகள் வேண்டும்,'' என, தருமை ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானம், ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வை.பழனிச்சாமி எழுதி, தாமரை பிரதர்ஸ் மீடியா சார்பில் பதிப்பிக்கப்பட்ட, 'அறிவியல் ஆன்மிகச் சிந்தனைகள் - ஓர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் பார்வையில்' என்ற நுால் வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடந்தது.
நுாலை வெளியிட்ட தருமை ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானம், ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பேசியதாவது:ஒரு நுால் எப்படி இயற்றப்பட வேண்டும் என்ற இலக்கணத்தை நன்னுால் விளக்குகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக இந்த 'அறிவியல் ஆன்மிகச் சிந்தனைகள்' நுால் உள்ளது.
அற்புதமான நுால்
இதை எழுதியவர், ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்தவர். அவர், தேர்தல் கமிஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மக்கள் பணியாற்றியவர். எப்போதும் பரபரப்பாக இயங்கிய இவர், அறிவியலுக்குள் இருக்கும் ஆன்மிக கருத்துகளை ஆராய்ந்து, அற்புதமான நுாலாக தந்து உள்ளார். இந்த நுால் சைவ, வைணவ சமய நுாலாகவும், தமிழ் பண்பாட்டு வரலாற்று நுாலாகவும் உள்ளது. ஒரு நுால், படிப்பவரை நல்வழிப்படுத்த வேண்டும். நம் சங்க இலக்கியத்தில் தலைவி, தலைவனுடன் உடன்போக்கு சென்றதை அறிந்து, தலைவியின் தாய் தேடிப் போகிறாள். எதிர்ப்பட்ட இணையரிடம், 'உங்களைப்போல என் பெண்ணும், ஆண் மகனுடன் சென்றாளா?' என கேட்கிறாள். அதற்கு, ஆணை பற்றி அவனும், அந்த பெண்ணை பற்றி அவளும் சொல்வதாக காட்சி வரும். அதாவது, மற்ற பெண்ணை ஆணோ, ஆணை பெண்ணோ நோக்காத பண்பாட்டை நம் இலக்கியம் சொல்கிறது.
வைத்தீஸ்வரன் கோவிலில், இறைவன் பெயரில் சொத்து இருக்கும். தினமும் முருகன் வரவு, செலவுகளை கவனித்து விட்டு, மாலையில் தன் தந்தையான இறைவனிடம், கணக்கையும் சாவியையும் ஒப்படைத்து செல்வார். மறுநாள் காலையில் வெறுங்கையுடன் வந்து கணக்கை ஏற்பார். இப்படியான சம்பிரதாயம் உள்ளது. இது, நம் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்குமான பாடம்தான்.
நிம்மதி தரும்
இப்படி நிறைய ஆன்மிக நிகழ்ச்சிகள், சமூகத்துக்கான பாடங்களாக உள்ளன. நிம்மதியற்ற வேளையில், சமயமும், ஆன்மிகமும், நிம்மதியை வழங்கும். முன்பெல்லாம், பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் இருந்தன. மாணவர்களுக்கு அவற்றின் வாயிலாக நீதிகள் சொல்லப்பட்டன. மீண்டும் அவை வந்தால்தான், மாணவர்கள் நல்லவர்களாக மாறுவர். இதுபோன்ற நுால்களை, மாணவர்கள் படிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பேரூர் ஆதீனத்தின் 25வது குருமகா சந்நிதானம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசியதாவது: நம் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தால் முந்தியவை. நமக்கு கிடைத்திருக்கும் தொல்காப்பியம் கூட, முதல் இலக்கண நுால் இல்லை. தொல்காப்பியர் கூட, முன்னர் இருந்த இலக்கண நுாலாசிரியர்களை எடுத்துக்காட்டுகிறார். அப்படிப்பட்ட பாரம்பரியமிக்க மொழி, பல நுால்களையும், உரைகளையும் தந்துள்ளது.
பரிணாமம்
டார்வினுக்கு முன்பே, நம் தொல்காப்பியத்தில், ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான பரிணாமம் விளக்கப்பட்டுள்ளது. கலிலியோவுக்கு முன்பே, பூமி உருண்டை என்பதை திருமுருகாற்றுப்படை விளக்கியுள்ளது. கோள்களின் நிறத்தையும் தன்மையையும் நம் ஜோதிட சாஸ்திரங்கள் விளக்கியுள்ளன. சமய நுால்களை நாம் தத்துவ நுால்களாக சுருக்கி விட்டோம். அவற்றை அறிவியலோடு இணைக்கும் பணியை நுாலாசிரியர் செய்துள்ளார். இங்குள்ள கல்வியாளர்கள் இதைத் தொடர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி பேசுகையில், ''நுாலாசிரியர், சமூகப் பணிகளில் ஈடுபட்ட பதவியில் இருந்தவர். அவர் அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும், அந்த பணியிலிருந்து ஓய்வு பெறவில்லை. தன் ஊரில் கோவில் கட்டி, ஊர் மக்களுக்கு பல உதவிகளை செய்தவர். இவர் தன் கல்வி, அனுபவ தகவல்களை இந்த பயனுள்ள நுாலாக எழுதி உள்ளார்,'' என்றார்.
நுாலின் முதல் படிகளை, முன்னாள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், நீதிபதிகள், கல்வி நிறுவன அதிகாரிகள், தமிழறிஞர்கள் பெற்றுக் கொண்டனர்.