/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடிப்படை வசதிகள் இல்லாத ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனை கர்ப்பிணியரின் உறவினர்கள் தவிப்பு
/
அடிப்படை வசதிகள் இல்லாத ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனை கர்ப்பிணியரின் உறவினர்கள் தவிப்பு
அடிப்படை வசதிகள் இல்லாத ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனை கர்ப்பிணியரின் உறவினர்கள் தவிப்பு
அடிப்படை வசதிகள் இல்லாத ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனை கர்ப்பிணியரின் உறவினர்கள் தவிப்பு
ADDED : நவ 06, 2025 03:11 AM

ராயபுரம்: ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மகப்பேறு மருத்துவமனையில், அடிப்படை வசதிகளில்லாத காரணத்தால் கர்ப்பிணியருடன் வரும் உறவினர்கள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
ராயபுரம் கல்லறை சாலையில், ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மகப்பேறு மருத்துவமனை, 1914ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இதன்பின், 2021ம் ஆண்டில், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு கட்டடம் கட்டப்பட்டது. தற்போது, 60 படுக்கைகளுடன் இயங்கி வருகிறது.
சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர், செங்கல்பட்டு, அரக்கோணம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும், பெண்கள் பிரசவத்திற்காக இங்கு வருகின்றனர். மாதந்தோறும் 1,200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன.
குழந்தை பிறப்பு அதிகளவில் இருக்கும் மருத்துவமனையில், கர்ப்பிணியருடன் தங்குவோருக்கு, போதிய தங்குமிடம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கிடையாது.
இது குறித்து கர்ப்பிணியரின் உறவினர்கள் கூறியதாவது:
தங்குமிடம் இல்லாததால், திறந்தவெளியில் அமர்ந்திருக்கும் நிலை உள்ளது. இங்கு தங்குபவர்களுக்கு, தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள் கிடையாது.
இதனால் மருத்துவமனையில் இருந்து அரை கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள பொது கழிப்பறைக்கு செல்லும் சூழ்நிலை இருந்து வருகிறது.
நேற்று முன்தினம், குழந்தை பெற்ற பெண்ணின் கணவர் ஒருவர், அவருக்கு டீ வாங்கிக் கொண்டு வந்தார்.
பார்வையாளர் நேரம் இல்லை என்பதால், அங்கிருந்த ஊழியர் அனுமதிக்க மறுத்துள்ளனர். மேலும், உதவியும் செய்யவில்லை. இதனால், தகராறு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து அந்த நபர் அவதிப்பட்டார்.
மழைக்காலம் என்பதால், இரவில் ஒதுங்க கூட இடமில்லாமல் தவிக்கும் நிலைமை உள்ளது. கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மின் விபத்து அபாயம்
ராயபுரம் கல்லறை சாலையில், மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் எதிரே உள்ள மின் இணைப்பு பெட்டி சாய்ந்த நிலையிலும், புதை மின் வடங்கள் அதன் அருகே சரிவர புதைக்கப்படாமல் உள்ளன.
இதையொட்டியே ஆர்.எஸ்.ஆர்.எம்., மகப்பேறு மருத்துவமனைக்கு, கர்ப்பிணியர் பச்சிளம் குழந்தையுடன் சென்று வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில், மின் விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

