/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை பல்கலையில் சாயம் போன சமய படிப்புகள்
/
சென்னை பல்கலையில் சாயம் போன சமய படிப்புகள்
ADDED : நவ 20, 2025 03:18 AM

- நமது நிருபர் -
சென்னை பல்கலையில், சாயம் போன துணி போல, சமய படிப்புகளில் யாரும் சேராததால், காலாவதியாகி உள்ளன.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது, 1857ல் தென் மாநிலங்களிலேயே முதல் பல்கலையாக, சென்னை பல்கலை துவக்கப்பட்டது.
முதுகலை, டிப்ளமோ, சான்றிதழ், ஆய்வு படிப்புகளை, 78 துறைகள் வாயிலாக வழங்கி, பலதுறை அறிஞர்களை உருவாக்கிய பெருமை இந்த பல்கலைக்கு உண்டு.
தற்போது, பல்கலையின் மதிப்பும் தரமும் பின்தங்கி, மாநில பல்கலைகளின் தரவரிசையில், 11வது இடத்துக்கு சென்றுவிட்டது.
இந்நிலையில், கணிதம், குற்றவியல், சைபர் தடயவியல், தகவல் பாதுகாப்பு, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், பொருளாதாரம், சர்வதேச சட்டம் உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் சேர மாணவர்கள் போட்டியிடுகின்றனர்.
ஆனால், போதிய பேராசிரியர்கள் இல்லாதது, ஆராய்ச்சி, தனிப்பயிற்சிக்கு வாய்ப்பில்லாதது உள்ளிட்ட காரணங்களால், இந்த துறைகளும் சிக்கலில் உள்ளன.
முக்கியமாக, எப் போதோ உருவாக்கப்பட்ட சமயம் சார்ந்த துறைகள், தற்போதும் அதே பாட புத்தகங்களுடன் உள்ளன. அதில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு, 3 லட்சம் ரூபாய்; இணை பேராசிரியர்களுக்கு, 2 - 2.50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் தரப்படுகிறது.
ஆனால், அந்த துறைகளில் மாணவர்கள் அறவே சேரவில்லை. முக்கியமாக தத்துவம், கிறிஸ்துவ படிப்பு, பவுத்தம், சமணம், சைவ சித்தாந்தம், திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட சமயம் சார்ந்த துறைகளும், ஹிந்தி, மலையாளம், கன்னடம், அரபு, தெலுங்கு, சமஸ்கிருதம், சங்கப்பலகை உள்ளிட்ட சிறுபான்மை மொழித்துறைகளும் மூடப்பட்டே உள்ளன.
நல்ல வேலைவாய்ப்புள்ள பார்மகாலஜி, டேக்சிகாலஜி உள்ளிட்ட அறிவியல் துறைகளும், யு.பி.எஸ்.சி.,யில் அதிக வாய்ப்புள்ள மானிடவியல் உள்ளிட்ட தொல்குடி துறைகளிலும், மாணவர் சேர்க்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளது. அவர்களும், ஏன் சேர்ந்தோம் என புலம்புகின்றனர்.
இதற்கு காரணம், மாணவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு சார்ந்த கல்வியை போதிக்காதது, ஆசிரியர்கள் தற்கால போட்டித் தேர்வுகளுக்கு ஏற்ப, தங்களை புதுப்பிக்காதது உள்ளிட்ட காரணங்கள்தான்.
இதுபோன்ற, மாணவர்கள் சேரத் தயங்கும் துறைகள் இயங்குவதால், பல்கலையின் நிதி வீணாவதுடன், தரவரிசையும் பாதிக்கப்படுகிறது.
அதனால், காலத்துக்கு ஒவ்வாத துறைகளை மூடிவிட்டு, தனியார் பல்கலைகளில் பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி காத்திருந்து, இடம் தேடும் வரவேற்பு உள்ள படிப்புகளை அறிமுகம் செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து, சென்னை பல்கலையின் முன்னாள் பேராசிரியர்கள் கூறியதாவது:
சென்னை பல்கலையில், ஐந்தாண்டுகளுக்கு பஷீர் அகமத் கல்லுாரி நிதியில் இருந்து, ஆய்வியல் படிப்பாக துவக்கப்பட்ட அரபுத்துறை தற்போதும் செயல்படுகிறது. அதில் பணியாற்றுவோருக்கு, பல்கலை ஊதியம் வழங்குகிறது.
மாணவர்கள் சேராத துறைகளை மூடிவிட்டு, மொழிப்பிரிவுகள் உள்ள பல்வேறு அரசு கல்லுாரிகளுக்கு பேராசிரியர்களை அனுப்பலாம். ஏற்கனவே, அண்ணாமலை பல்கலையில் இருந்த உபரி ஆசிரியர்கள் இவ்வாறுதான் பணிமாற்றம் செய்யப்பட்டனர்.
அவ்வாறு செய்யாததால், மாணவர்கள் இல்லாமலும், பாடம் நடத்தாமலும் சம்பளம் வாங்கும் பேராசிரியர்கள், பல்வேறு சங்கங்களை உருவாக்கி, பல்கலை நிர்வாகத்துக்கு எதிரான கருத்துக்களை பரப்பி, வேலை செய்வோருக்கும், நிர்வாகத்துக்கும் கெட்ட பெயரை உருவாக்குகின்றனர். அதனால், உயர்கல்வி துறை செயலர், இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

