/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெள்ள நிவாரண கள ஆய்வு செயலியில் புகைப்படம் எடுக்க பெண்கள் தயக்கம் வாடகை ஒப்பந்தம் மட்டும் இருந்தால் விண்ணப்பம் நிராகரிப்பு
/
வெள்ள நிவாரண கள ஆய்வு செயலியில் புகைப்படம் எடுக்க பெண்கள் தயக்கம் வாடகை ஒப்பந்தம் மட்டும் இருந்தால் விண்ணப்பம் நிராகரிப்பு
வெள்ள நிவாரண கள ஆய்வு செயலியில் புகைப்படம் எடுக்க பெண்கள் தயக்கம் வாடகை ஒப்பந்தம் மட்டும் இருந்தால் விண்ணப்பம் நிராகரிப்பு
வெள்ள நிவாரண கள ஆய்வு செயலியில் புகைப்படம் எடுக்க பெண்கள் தயக்கம் வாடகை ஒப்பந்தம் மட்டும் இருந்தால் விண்ணப்பம் நிராகரிப்பு
ADDED : ஜன 01, 2024 01:47 AM

சென்னை:'மிக்ஜாம்' புயலால் டிச., 3, 4ம் தேதிகளில் பெய்த கனமழையால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய, நான்கு மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் பாதித்தது.
சென்னை மாவட்டம் முழுதும் மற்றும் இதர மூன்று மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த தாலுகாக்களில், 17ம் தேதி முதல், வெள்ள நிவாரண நிதியாக, தலா 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதன்படி, சென்னை மாவட்டத்தில் 13.72 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது.
சர்க்கரை கார்டு, எந்த பொருளும் வாங்க முடியாத கார்டுதாரர்கள், வருமான வரி செலுத்துவோர், வெளியூரில் இருந்து இங்கு வந்து தங்கி வேலை செய்வோருக்கு, வெள்ள பாதிப்பு இருந்தால், அதற்கான விபரத்துடன், அந்தந்த பகுதி ரேஷன் கடைகளில் விண்ணப்பித்தனர்.
அறிவிப்பு
அதன்படி, சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், 5.60 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பித்துள்ளனர். இதில், 2.50 லட்சம் பேர் குடும்ப அட்டை இணைத்தும், 3.10 லட்சம் பேர் இணைக்காமலும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்கள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, 'ஆதார்' அட்டையை வைத்து விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டன.
இதில், காலதாமதம் ஏற்பட்டதால், ஒரு வாரத்திற்கு முன் விண்ணப்பங்கள் அடிப்படையில், கள ஆய்வு துவங்கியது.
இதற்கான படிவத்தில், டிச., 2023க்கு முந்தைய, வாடகை ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஏற்கனவே, 6,000 வாங்கிய பிறகும், அதே கார்டில் உள்ள இதர நபர்கள், சொந்த வீட்டுக்கே வாடகை ஒப்பந்தம் தயாரித்து விண்ணப்பித்தது தெரிந்தது.
மேலும், ஒரே அறையில், 4, 5 பேர் என, பேச்சிலராக வசிக்கும் நபர்கள், தனித்தனியாக வாடகை ஒப்பந்தம் தயாரித்து விண்ணப்பித்துள்ளனர். இதனால், மொபைல் போன் செயலி வாயிலாக கள ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டது. இந்த பணி, இரண்டு நாட்களாக நடக்கிறது.
இதில், வசிப்பிடத்திற்கான ஆதார், குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், எரிவாயு ரசீது, வங்கி கணக்கு புத்தகம் என எதாவது ஒரு ஆவணம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
சிக்கல்
ஆனால், பதிவு செய்யப்படாத வாடகை ஒப்பந்தம் மட்டும் வைத்து விண்ணப்பித்தால், ஏற்றுக்கொள்ளாத வகையில், செயலி வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும், வீட்டு முகப்பு பகுதியில் விண்ணப்பித்தவரை நிற்க வைத்து, மொபைல் போனில் புகைப்படம் பதிவேற்ற வேண்டும்.
இதற்கு, ஆண்கள் ஏற்றுக்கொள்கின்றனர். பல பெண்கள், புகைப்படத்தை தவறாக பயன்படுத்தப்படும் என, ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.
இதனால், செயலி வாயிலாக பதிவேற்றம் செய்ய முடியாமல், மாநகராட்சி அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.
கள ஆய்வை குறிப்பிட்ட நாளில் முடிக்க முடியாத நிலையும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தும், நிவாரணம் கிடைக்காத நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பிட்ட முகவரியில் வசிப்பதை உறுதி செய்ய, ஆவணங்கள் கேட்கிறோம். பதிவு செய்யப்படாத வாடகை ஒப்பந்தம் ஏற்பதில்லை. செயலி வாயிலாக, கள ஆய்வு செய்வதில், பல பெண்கள் வீட்டு முகப்பில் நிற்க வைத்து புகைப்படம் எடுக்க தயங்குகின்றனர். புகைப்படம் தவறாக பயன்படுத்தப்படும் என அச்சப்படுகின்றனர். புரியவைத்தும், பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுபோன்ற விண்ணப்பங்களை முடிக்க முடியவில்லை. அப்படியே வைத்துள்ளோம்.
- மாநகராட்சி அதிகாரிகள்
காரணம் என்ன?
கள ஆய்வு என்றால் நேரடியாக வீட்டுக்கு சென்று விசாரிக்க வேண்டும். ஆனால், அலுவலகத்தில் வரவழைப்பது, தெரு முனையில் வரவழைத்து விசாரிப்பது, வராத நபர்களுக்கு விசாரித்தது போல் கள ஆய்வு செய்துள்ளனர். மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் கள ஆய்வின்போது, இதுபோல் நடந்துள்ளது.
இந்த தவறு நடக்காமல் இருக்க, நிவாரணம் வழங்கும், கள ஆய்வு ஆப்பில், வீட்டு முகப்பு புகைப்படம் சேர்த்துள்ளனர். இதனால், ஊழியர்கள் வீட்டுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டின் தன்மை குறித்தும் தெரிய வரும் என, அதிகாரிகள் கூறினர்.