ADDED : ஜூன் 11, 2025 01:06 AM

சென்னை, பாதசாரிகளுக்கு இடையூராக நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டி கடைகள் மட்டுமின்றி, வணிக நிறுவனங்கள் பெயர் பதாகைகளையும் மாநகராட்சியினர் நேற்று அதிரடியாக அகற்றினர்.
கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட, தியாகராயா சாலையில் பாதசாரிகள் வளாகம் அமைக்கப்பட்டது. அவற்றை அங்குள்ள வணிக நிறுவனங்கள் ஆக்கிரமித்து, தங்கள் விற்பனை பொருட்கள் மட்டுமின்றி, வாடிக்கையாளர்களை கவரும் வகையில், எல்.இ.டி.,விளக்குகளுடன் கூடிய பெயர் பதாகைகளை அமைத்து இருந்தனர்.
மேலும், தள்ளு வண்டிகளிலும் ஆங்காங்கே நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தன. இதனால் பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், சாலையை பயன்படுத்தி வந்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவியது.
இதையடுத்து, கோடம்பாக்கம் மண்டல அதிகாரி முருகேசன் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள், நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் மட்டுமின்றி, வணிக நிறுவனங்களின் பெயர் பதாகைகளையும் அதிரடியாக அகற்றினர்.
இதுகுறித்து, மண்டல அதிகாரிகள் கூறுகையில், 'தொடர்ந்து நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். ஓரிரு நாட்களில் மீண்டும் வியாபாரிகள் நடைபாதையை ஆக்கிரமித்து விடுகின்றனர். தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அபராதம் மட்டுமே விதிக்கமுடிகிறது; கைது செய்ய முடியாது' என்றார்.