ADDED : மே 02, 2025 12:20 AM
திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அருகே உள்ள மாம்பாக்கம் ஊராட்சி தலைவராக, 2021ல் அ.தி.மு.க.,வை சேர்ந்த வீராசாமி, தி.மு.க.,வைச் சேர்ந்த துணைத் தலைவர் லோகேஷ்வரி தேர்வாகினர்.
கவுன்சிலர்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுவது, நிதியில் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, காசோலையில் கையெழுத்திடும் அவர்களின் அதிகாரம், 2023ல் பறிக்கப்பட்டது. இதுதொடர்பாக, வீராசாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
தொடர்ந்து, அக்., 14ல், ஊராட்சி தலைவர் வீராசாமியை பதவி நீக்கக்கோரி, வார்டு கவுன்சிலர்கள், ஊரக வளர்ச்சி துறை கமிஷனர் பொன்னையாவை சந்தித்து வலியுறுத்தினர். இதுசம்பந்தமாக விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், த.வெ.க.,வுக்கு தாவிய வீராசாமி, தி.மு.க.,வைச் சேர்ந்த துணைத்தலைவர் லோகேஸ்வரி ஆகியோரை பதவியில் இருந்து நீக்கம் செய்து, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த பதவி நீக்கத்திற்கான அறிக்கை, தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் வந்துள்ளது.