/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆமை வேகத்தில் கூவம் தரைபாலப்பணி சூளைமேடு பகுதியினர் அதிருப்தி
/
ஆமை வேகத்தில் கூவம் தரைபாலப்பணி சூளைமேடு பகுதியினர் அதிருப்தி
ஆமை வேகத்தில் கூவம் தரைபாலப்பணி சூளைமேடு பகுதியினர் அதிருப்தி
ஆமை வேகத்தில் கூவம் தரைபாலப்பணி சூளைமேடு பகுதியினர் அதிருப்தி
ADDED : ஏப் 10, 2025 12:31 AM

அரும்பாக்கம், சென்னை அண்ணா நகர் மண்டலம், 107வது வார்டில், சூளைமேடு மாதா கோவில் தெரு உள்ளது. இந்த தெருவைச் சுற்றி, எம்.எச்., காலனி, கலெக்டர் காலனி உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள ரயில்வே காலனி 3வது தெரு - மாதா கோவில் தெரு இணைக்கும் பகுதியில், அரும்பாக்கம், அமைந்தகரை வழியாக விருகம்பாக்கம் கால்வாய் செல்கிறது.
இந்த கால்வாயை பொதுமக்கள் கடப்பதற்காக நான்கு அடி அகலம் கொண்ட தரைப்பாலம் உள்ளது. இப்பகுதியில் வசிப்போர் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை கடந்து, பெரியார் பாதை வழியாக சூளைமேடு, அரும்பாக்கம், அண்ணா நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கின்றனர்.
இந்த தரைப்பாலம் பல ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையின் போது, பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.
இதையடுத்து கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் புதிய தரைப்பாலம் அமைக்க 1.03 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பூமி பூஜை நடந்தது. ஆனாலும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் திட்ட மதிப்பீட்டை மாற்றி, மீண்டும் 1.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் மீண்டும் பூமி பூஜை போடப்பட்டது. ஆனாலும் பணிகள் துவங்க வில்லை.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. கடந்தாண்டு ஆக., 12ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பணி துவங்க அடிக்கல் நாட்டினார். அப்போது, தடுப்பு சுவர் மட்டும் இடிக்கப்பட்டது. அதன்பின் எந்த பணிகளும் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டன.
இதுகுறித்து மீண்டும் நம் நாளிழிதலில் செய்தி வெளியானது. இதையடுத்து, தரைப்பாலத்தை சீரமைக்கும் பணியை, கடந்த ஜனவரியில் மாநகராட்சி துவங்கியது. பள்ளம் தோண்டும் பணி முடிந்த நிலையில், மீண்டும் பணிகள் கிடப்பில் கிடக்கின்றன.
சேதமடைந்த தரைப்பாலத்தை முழுமையாக உடைக்காமல், அரைகுறையாக விடப்பட்டுள்ளதால், சிறிய ஏணி உதவியுடன், மக்கள் விபத்து அபாயத்தில் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், தரைப்பாலப் பணியில் மாற்றி மாற்றி, குளறுபடி செய்வதாக, குடியிருப்பு மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம் பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதியினர் எதிர்பார்கின்றனர்.
***